Search This Blog n

26 October 2013

இந்தியாவில் தயாராகும் சுவிஸ் சாக்லேட்டுகள்


சுவிட்சர்லாந்து நாட்டுச் சாக்லேட்டுகள் இனிப்பு வகைகளுக்கும், துணிமணிகள் வர்த்தகத்திற்கும் பெயர்பெற்ற இந்தியாவின் சூரத் நகரில் தற்போது  தயாரிக்கப்பட உள்ளன.

சூரத் நகரில் 2,000 கோடி மதிப்பீடு பெறும் ரியல் எஸ்டேட் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள ரஜ்ஹன்ஸ் குழுமம் தற்போது சாக்லேட் வர்த்தகத்துறையில் தங்கள் கவனத்தைத் திருப்பியுள்ளது.

சுவிட்சர்லாந்தில் முன்னணியில் உள்ள சாக்லேட் நிறுவனம் ஒன்றுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக இந்தக் குழுமத்தின் நிர்வாகத் தலைவர் ஜெயேஷ் தேசாய் தெரிவித்துள்ளார்.
இதற்கான தொழிற்சாலை ரூ. 500 கோடி மதிப்பீட்டில் 1.5 லட்சம் சதுர அடி நிலப்பரப்பில் மும்பை- அகமதாபாத் நெடுஞ்சாலையில் கிம் என்ற பகுதியில் அமைக்கப்பட உள்ளது.

இந்தத் தொழிற்சாலைக்கான இயந்திரங்களும் அதன் தொழில்நுட்பங்களும் இங்கிலாந்து, டென்மார்க், ஜேர்மனி மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளில் இருந்து வரவழைக்கப்பட உள்ளன.

காட்பரி மற்றும் நெஸ்லேக்குப் பின்னர் இந்தியாவில் சாக்லேட் தொழிற்துறையில் அமையவிருக்கும் மூன்றாவது பெரிய நிறுவனமான இது குஜராத்தில் இந்த வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ள முதல் உற்பத்தி நிறுவனம் என்ற பெருமையைப் பெறுகின்றது.
காட்பரிஸ் நிறுவனத்தின் இரண்டு உயர்மட்ட நிர்வாகிகள் தற்போது ரஜ்ஹான்ஸ் குழுமத்தினரால் தங்களின் புதிய தொழிற்சாலைக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

வரும் ஜனவரியில் விற்பனைக்கு வரும் இந்த சாக்லேட் அச்சுகள் ஸ்மிட்டன் என்ற பெயரிலும், சாக்லேட் பார்கள் ஹோப்பிட்ஸ் என்ற பெயரிலும் விற்பனைக்கு வரும். 25 டன்னுக்குக் குறையாமல் உற்பத்தி இங்கு நடைபெறும் என்று ரஜ்ஹான்ஸ் குழுமம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு ரூ. 4,000 கோடி வர்த்தகத்தில் உள்ள இந்திய சாக்லேட் சந்தை வரும் 2015க்குள் ரூ. 7,500 கோடியைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் 70 சதவிகித வர்த்தகத்தை காட்பரிஸ் நிறுவனம் தன்னுடைய பிடியில் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

0 கருத்துகள்:

Post a Comment