தில்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதில், சத்தீஸ்கர் மாநிலத்துக்கு இரண்டு கட்டங்களாகவும் ஏனைய மூன்று மாநிலங்கள், தில்லி யூனியன் பிரதேசத்துக்கு ஒரே கட்டமாகவும் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தேர்தல் நடைபெறவுள்ள ஐந்து மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.
ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட மாநிலங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகள், மத்திய, மாநில உள்துறைச் செயலர்கள், மாநில காவல் துறை தலைமை இயக்குநர்கள் உள்ளிட்டோருடன் கடந்த வாரம் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை நடத்தியிருந்தனர். அதைத் தொடர்ந்து, தில்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத் தலைமையில் தேர்தல் ஆணையர்கள் எச்.எஸ். பிரம்மா, டாக்டர் நசீம் ஜைதி ஆகியோர் வெள்ளிக்கிழமை காலையில் ஆலோசனை நடத்தினர். அதன் முடிவில் ஐந்து மாநிலங்களுக்குத் தேர்தல் நடத்தும் அறிவிப்பை வி.எஸ். சம்பத் செய்தியாளர்களிடம் வெளியிட்டார். அதன் விவரம்:
"சத்தீஸ்கர் மாநிலத்துக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும். முதல் கட்ட தேர்தல் நவம்பர் 11, இரண்டாம் கட்ட தேர்தல் நவம்பர் 19 ஆகிய தேதிகளில் நடத்தப்படும். ஏனைய மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும்.
மத்திய பிரதேசத்துக்கு நவம்பர் 25, ராஜஸ்தான் மாநிலத்துக்கு டிசம்பர் 1, தில்லி, மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கு டிசம்பர் 4 ஆகிய தேதிகளில் தேர்தல் நடத்தப்படும். ஐந்து மாநில தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8-ஆம் தேதி நடைபெறும்.
தேர்தலை எதிர்கொள்ளும் ஐந்து மாநிலங்களில் 630 தொகுதிகள் உள்ளன. சுமார் 11 கோடி வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்குரிமை பெற்றுள்ளனர். ஐந்து மாநிலங்களில் மொத்தம் ஒரு லட்சத்து 30 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும்.
வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள வரிசை எண், வாக்காளர் புகைப்படம் அடங்கிய சீட்டுகளை வாக்குரிமைக்கு தகுதி பெறும் வாக்காளர்களுக்கு விநியோகிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் சத்தீஸ்கரில் 98.81 சதவீதமும், ராஜஸ்தானில் 99.43 சதவீதமும் மற்ற மூன்று மாநிலங்களில் 100 சதவீதமும் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை (இபிஐசி) வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே, அந்த ஆவணத்துடன் அவர்கள் வாக்களிக்க வாக்குச்சாவடிக்குச் செல்ல வேண்டும்' என்று சம்பத் கூறினார்.
குற்ற வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை பெற்றதால் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர் தகுதியை இழந்துள்ள லாலு பிரசாத், ஜெகதீஷ் சர்மா, ரஷீத் மசூத் ஆகியோரின் இடங்களுக்கு எப்போது தேர்தல் நடத்தப்படும் என செய்தியாளர்கள் கேட்டதற்கு, "அந்த இடங்கள் காலியாகவுள்ளன என மக்களவை, மாநிலங்களவைச் செயலகங்கள் அரசாணை வெளியிட்டதும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்' என்று சம்பத் பதில் அளித்தார்.
"என்ஓடிஏ' வசதி அறிமுகம்
தில்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல்களின்போது முதன்முறையாக "யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை' (என்ஓடிஏ) என்ற பகுதி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், வாக்குச்சீட்டு ஆகியவற்றில் இடம்பெறும்' என்று தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத் கூறினார். அவர் மேலும் கூறியதாவது:
"உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி வழங்கிய தீர்ப்பின்படி, ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களின்போது வாக்காளர்களுக்கு "என்ஓடிஏ' வாய்ப்பு அளிக்கப்படும். பிரமாண பத்திரத்தில் வேட்பாளரின் விவரங்கள் தொடர்பான பகுதியில் முழு விவரமும் நிரப்பப்பட வேண்டும். அவ்வாறு நிரப்பாத வேட்பு மனு நிராகரிக்கப்படும். இந்த விவகாரத்தில் நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு குறித்து விரைவில் தேர்தல் பார்வையாளர்கள், மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு விளக்கப்படும்' என்று சம்பத் கூறினார்.
ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதியை அறிவிப்பதற்காக தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற (இடமிருந்து) தேர்தல் ஆணையர் எச்.எஸ். பிரம்மா, தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத், ஆணையர் சையது நஸீம் அகமது ஜைதி ஆகியோர்.
0 கருத்துகள்:
Post a Comment