கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை -5 இந்திய ராணுவம் ஏவுகணைகளை தயாரித்து சோதனை நடத்தி வருகிறது. அக்னி என்ற பெயரிடப்பட்ட இந்த வரிசையில் ‘அக்னி-1’ 700 கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்கக்கூடியது. ‘அக்னி-2’ 2 ஆயிரம் கிலோ மீட்டரும், ‘அக்னி-3’ மற்றும் ‘அக்னி-4’ முறையே 2,500 கி.மீ, 3,500 கி.மீ.க்கு மேல் சென்று தாக்கக் கூடியவைகளாகும்.
ஏவுகணை தொழில்நுட்பத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அக்னி-5 ஏவுகணையை இந்திய ராணுவம் தயாரித்துள்ளது. அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன்பெற்ற இந்த அக்னி-5 ஏவுகணை ஏற்கனவே 2 முறை சோதனை நடத்தப்பட்டுள்ளது. 3-வது முறையாக ஒரு சிறப்பான இரும்பு ஏவுதளத்தில் இருந்து ஏவி சோதனை நடத்தப்பட உள்ளது.
இந்த ஏவுகணையை ஏவும் தளத்துடன் சேர்த்து ஒரு வாகனத்தில் வைத்து ஏவும் இடத்துக்கு சுலபமாக எடுத்துச்செல்ல முடியும். மிகவும் விரைவாகவும், பலமுனை ஏவுதளத்தில் இருந்தும் இதனை ஏவ முடியும். இந்த அக்னி-5 ஏவுகணை 5 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு சென்று தாக்கக்கூடியது. இந்தியாவில் இருந்து சீனாவின் பெய்ஜிங் நகரையோ, அதற்கு இடையே உள்ள எந்த ஒரு நகரையோ தாக்கவல்லது.
இந்த ஏவுகணையை தாங்கிப்பிடிக்கும் ஏவுதளம் சிறப்பான எக்கினால் செய்யப்பட்டது. ஏவும்போது வெளிப்படும் அதிகப்படியான அழுத்தத்தை தாங்கக்கூடியது. 17 மீட்டர் நீளமும், 50 டன் எடையும் கொண்ட இந்த ஏவுகணையை, 300 முதல் 400 டன் வேகத்தில் உந்தித்தள்ளும் சக்தி கொண்டது. அதுமட்டுமல்ல இந்த ஏவுதளத்திற்குள் ஏவுகணையை பல ஆண்டுகளுக்கு பாதுகாப்பாக வைக்க முடியும்.
3 அடுக்குகளை கொண்ட இந்த ஏவுகணை ஒரு டன் அளவுக்கு வெடிக்கும் முன்பகுதியை கொண்டது. இந்த ஏவுகணை முதலில் ஏவுதளத்தில் இருந்து 30 மீட்டர் உயரத்திற்கு உந்தித்தள்ளும். அதன்பின்னர் மோட்டார் ஏவுகணையை பற்றவைக்கும். இவ்வளவு சக்திவாய்ந்த அக்னி-5 ஏவுகணையின் மூன்றாம்கட்ட சோதனை அடுத்த மாத இறுதியில் நடைபெற இருப்பதாக ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முகமை அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 கருத்துகள்:
Post a Comment