சொத்துக் குவிப்பு வழக்கில் கைதுசெய்யப்பட்டு, பார்ப்பன அக்ரஹார சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா ஜெயராமை தமிழக சிறைக்கு மாற்றுமாறு கோரி, இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த வராகி என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளதாக தமிழக நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
4 ஆண்டு சிறைத்தண்டனையும், 100 கோடி ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ள ஜெயலலிதா ஜெயராம் கர்நாடக சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதால், இரு மாநிலங்களினதும் அமைதிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் போராட்டங்கள், கடையடைப்பு, பகிஷ்கரிப்பு என்பன இடம்பெறுவதாகவும், இரு மாநிலங்களில் சட்டம் மற்றும் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வழக்கின் விசாரணை நியாயமாக நடைபெற வேண்டுமென்ற காரணத்தால் வழக்கு தமிழகத்திலிருந்து கர்நாடகத்திற்கு மாற்றப்பட்டதாகவும், தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளதால் குற்றவாளியை கர்நாடகாவில் தடுத்துவைக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கைதிகள் மாற்றல் சட்டத்திற்கு அமைவாக ஜெயலலிதா ஜெயராமை தமிழக சிறைக்கு மாற்ற முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு மாநிலங்களின் அமைதி, மக்களின் நலன் என்பவற்றை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை தாமதமின்றி முன்னெடுக்கப்பட வேண்டுமென இந்திய உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சொத்துக் குவிப்பு வழக்கில் அறிவித்தல் விடுத்தால், நாளை இந்திய உச்ச நீதிமன்றத்தில் ஆஜராவதாக அரச சிறப்பு சட்டத்தரணி பவானி சிங் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் பிணை மனு மீதான விசாரணை நாளை இடம்பெறவுள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ள போதிலும், நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு தமக்கு இதுவரை அறிவிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவ்வாறு அறிவித்தல் கிடைக்கும் பட்சத்தில் பிணை மனு மீதான விசாரணைக்கு நாளை ஆஜராவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களுர் விசேட நீதிமன்றத்திலும், கர்நாடகா உயர் நீதிமன்றத்திலும் அரச தரப்பு சட்டத்தரணியாக பவானி சிங் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, பிணை மனு மீதான வழக்கு விசாரணையில் ஜெயலலிதா சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி பாலி எஸ் நாரிமன் ஆஜராகவுள்ளதாகவும் இந்தியத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
0 கருத்துகள்:
Post a Comment