தாம்பரம் ரெயில் நிலையத்தில் ஓடும் ரெயிலில் பெண் அதிகாரியிடம் 7 பவுன் சங்கிலியை பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ரெயில்வே பெண் அதிகாரி
சென்னையை அடுத்த கிண்டி மடுவாங்கரையைச் சேர்ந்தவர் அமுதா(வயது 39). இவர், திருச்சி ரெயில்வே அலுவலகத்தில் உதவி வணிக அலுவலராக உள்ளார். நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் திருச்சியில் இருந்து அவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் தாம்பரம் ரெயில் நிலையம் வந்து இறங்கினார். பின்னர் கிண்டி செல்வதற்காக சென்னை கடற்கரைக்கு செல்லும் மின்சார ரெயிலில் முதல் வகுப்பு பெட்டியில் ஏறினார். அந்த பெட்டியில் 2 ஆண்கள் மட்டும் இருந்தனர்.
ரெயில் புறப்பட்டதும் அந்த பெட்டியில் இருந்த ஒரு வாலிபர் திடீரென எழுந்து வந்து அமுதா கழுத்தில் கிடந்த 7 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு ஓடும் ரெயிலில் இருந்து கீழே குதித்து தப்பி ஓடி விட்டார். பின்னர் தாம்பரம் சானடோரியம் ரெயில் நிலையத்தில் இறங்கிய அமுதா, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரிடம் இதுபற்றி கூறினார்.
வாலிபர் கைது
உடனடியாக அவர்கள் தாம்பரத்தில் உள்ள ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ஈஸ்வரன், விக்னேஷ்வரன் ஆகியோர் தாம்பரம் ரெயில் நிலைய பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது ஒரு வாலிபரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அதில் அவர், செங்கல்பட்டை சேர்ந்த வினோத்குமார்(29) என்பதும், அமுதாவிடம் சங்கிலி பறித்ததும் தெரிந்தது. அவரது பேண்ட் பையில் இருந்த நகையை கைப்பற்றிய பாதுகாப்பு படை போலீசார், அவரை தாம்பரம் ரெயில் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். தாம்பரம் ரெயில்வே போலீசார் வினோத்குமாரை கைது செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.
0 கருத்துகள்:
Post a Comment