புதுவை மாநிலத்தின் காரைக்கால், தமிழ்நாட்டின் தர்மபுரி உள்ளிட்ட சில வானொலி நிலையங்களில் இந்தி மொழி ஒலிபரப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் வானொலி மட்டுமின்றி, எஃப்.எம். என்றழைக்கப்படும் பன்பலை வரிசைகளில் பல தனியார் வானொலிகள், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஒலிபரப்பு செய்து வருகின்றன. இந்தி பேசும் மக்களுக்கு அம்மொழியில் மட்டும் நிகழ்ச்சிகளை ஒலி பரப்பு செய்யும் வானொலிகளும் இருக்கின்றன. மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள அகில இந்திய வானொலியின் ஒரு பிரிவு, தனியாக இந்தி மொழி நிகழ்ச்சிகளையும், பாடல்களையும் ஒலிபரப்பி வரும் நிலையில், எதற்காக மற்ற மொழி வானொலி நிலையங்களையும் இந்தி மொழி நிகழ்ச்சிகளை ஒலிபரப்பு செய்யுமாறு வற்புறுத்த வேண்டும்?
இந்தி மட்டும்தான் இந்திய நாட்டின் மொழியா? இந்திய அரசமைப்பு சட்டத்தின் மொழி அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ள 23 மொழிகளும் தேசிய மொழிகள் என்றிருக்கையில், இந்தி மொழிக்கு மட்டும் வலிந்து முன்னுரிமை கொடுக்க மத்திய அரசு முயற்சிப்பது ஏன்? இன்று வரை இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி, இந்திய ஒன்றியம் (யூனியன் ஆஃப் இந்தியா) என்றே குறிப்பிடப்பட்டிருப்பதற்குக் காரணமென்ன?
இந்த நாட்டில் பல்வேறு மொழிகளை பேசக்கூடிய, பல பண்பாடுகள் கொண்ட மக்கள் வாழும் மாநிலங்களின் ஒன்றிணைப்பு என்பதுதானே இந்திய ஒன்றியம் என்பதன் பொருள். பிரதமர் மோடி, முதலமைச்சராக இருந்து ஆண்ட குஜராத் மாநிலம் கூட, மொழி அடிப்படையில் அல்லவா ஒன்றுபட்ட பம்பாய் மாநிலத்தில் இருந்து பிரிந்து தனி மாநிலம் ஆனது? இதனை ஏன் மோடி மறந்தார்? குஜராத்தில் இந்தி மொழியை அரசு மொழியாக்குவாரா மோடி? அங்கு இந்தியை கட்டாய கல்வி மொழியாக்குவாராழ அதனை குஜராத்திகள் ஏற்றுக்கொள்வார்களா? கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளில் கூட குஜராத்தி தவிர வேறு மொழி இல்லாத மாநிலமாக குஜராத் இருப்பதால் அதன் முன்னேற்றம் கெட்டுவிட்டதா என்ன?
எனவே, இந்தி பேசாத மொழி வழி மாநிலங்களின் மக்களின் மீது தொடர்ந்து இந்தி திணிக்கப்படுவது ஏன்? இந்தியாவின் மற்ற தேசிய மொழிகளுக்கு இல்லாத அறிவு வளம் ஏதாவது இந்தி மொழியில் உள்ளதா? இந்திய நாட்டு மொழிகளிலேயே இறுதியாகப் பிறந்த மொழி இந்தி மொழி. அதுவும் இந்தி பேசும் மாநிலங்களில் வெவ்வேறு வழக்காடுகளைக் கொண்டுள்ளது. இப்படிப்பட்ட நிலையில், வளமையான மொழிகள் பலவுள்ள இந்திய நாட்டில் இந்திக்கு மட்டும் முன்னுரிமை கொடுத்து நாட்டு மக்களிடையே கசப்புணர்வை ஏற்படுத்துவது ஏன்?
பிரதமர் மோடி தலைமையிலான அரசு சர்சைக்குரிய பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கருப்புப் பணத்தை வெளிக்கொணருவோம் என்றது, இப்போது கருப்புப் பணம் வைத்திருப்போர் பட்டியலை வெளியிட முடியாது என்று கூறுகிறது. அத்யாவசியப் பொருட்களின் விலைகளை குறைப்போம் என்றார்கள், ஒன்றும் குறையவில்லை. கச்சா எண்ணெய் விலை குறைந்ததால் பெட்ரோல், டீசல் விலைகள் குறைத்துள்ளோம் என்றார்கள். ஆனால், டிசல் விலை நிர்ணய உரிமையை எண்ணெய் நிறுவனங்களுக்கு கொடுத்து விட்டார்கள். அதே நேரத்தில் சமையல் எரிவாயு உருளை விலையை உயர்த்தி விட்டார்கள்.
நாட்டின் உற்பத்தியும் ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது என்று பரப்புரை செய்கிறார்கள், ஆனால் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இன்னமும் 61 ரூபாயில்தான் நிற்கிறது, இறங்க மறுக்கிறது. வேலை வாய்ப்பை உருவாகுவோம் என்றார்கள், இப்போது அந்நிய நேரடி முதலீடு வந்தால் அதுவாகவே சாத்தியமாகும் என்கிறார்கள். இப்படி ஆட்சியை வைத்துக்கொண்டு நன்மை பயக்கும் திட்டங்களை வரையறை செய்து நிறைவேற்ற திறனற்ற மோடி அரசு, மக்களை திசைதிருப்ப இந்திப் பிரச்சனையை எழுப்புகிறது. மக்களின் நலனிற்காக போராடும் அரசியல் சக்திகளின் ஆற்றலை திசை திருப்பி வீண்டிக்கும் நோக்கும் கொண்டதாக இந்தித் திணிப்பு இருக்கிறது.
இந்த நாட்டின் வளங்களை பயன்படுத்தி, தொழில் உற்பத்தியை பெருக்கி, வேலை வாய்ப்புகளை பெருக்க வகையில்லாமல், சமஸ்கிருதம் வளர்ப்பு, இந்தி திணிப்பு என்று எதிர்மறை வேலைகளில் ஈடுபடுகிறது மோடி அரசு. பாரதிய ஜனதா கட்சியினர் தமி்ழ்நாட்டை புரிந்துகொண்டு செயல்பட வேண்டும். இந்தி மொழித் திணிப்புக்கு எதிராக பெரு்ம போராட்டங்களை கண்ட தமிழகம், இந்தி மொழி திணிக்கப்பட்டால், அதனை எதிர்த்து மீண்டும் மொழிப்போர் வெடிக்கும் என்பதை மறுந்து
விடக்கூடாது.
0 கருத்துகள்:
Post a Comment