ரூ 66 கோடி சொத்துக்கள் ரூ 2847 கோடியாக உயர்வு! மலைக்க வைத்த பவானிசிங்
பெங்களூர்: 18 ஆண்டுகளாக நடைபெற்ற சொத்துக்குவிப்பு வழக்கின் கிளைமாக்ஸ் நாளை தெரிந்து விடும். உச்சக்கட்ட பரபரப்பில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் இருக்கின்றனர். தீர்ப்பினை தெரிந்து கொள்வதற்கு அனைத்து தரப்பினரும் ஆர்வமாக உள்ளனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் எப்படிப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றி, எத்தனை இடங்களில் சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளனர் என்ற விபரங்களை 259 சாட்சிகளின் வாக்குமூலங்களை அடிப்படையாக வைத்து 14 நாட்கள் வாதிட்ட அரசு வழக்கறிஞர் பவானிசிங், தனது வாதத்தை மொத்தமாக தொகுத்து அளித்தார்.
306 சொத்துக்களின் பட்டியலை வாசிக்க வாசிக்க அதை கேட்பவர்களுக்கு அது மலைப்பை ஏற்படுத்தியது. இந்த பட்டியல்படி, 1991-96- இந்த ஐந்து ஆண்டுகளில், ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, வாங்கிப் போட்டுள்ள சொத்துக்களில், ஒரு பகுதி சொத்துக்களின் இன்றைய அரசு மதிப்பு 2,847 கோடியே 50 லட்சம் ரூபாய்; சந்தை மதிப்போ 5,107 கோடி ரூயாய்.
இத்துடன் நகை, வைரம், கம்பெனி முதலீடுகள் போன்ற அசையும் சொத்துக்களின் மதிப்பையும் கணக்கில் சேர்த்தால் மேலும் பல கோடி ரூபாய் வரும். அதாவது ஜெயலலிதா முதல்வர் பொறுப்பை ஏற்காதபோது இருந்ததைவிட 310 மடங்கு அதிகச் சொத்துகளை ஐந்தாண்டுகளில் குவித்திருக்கிறார் என்று முடித்தார் பவானிசிங்.
ஜெயலலிதாவிற்குச் சொந்தமான கொடநாட்டில் 800 ஏக்கர் நிலமும், ஊத்துக்கோட்டையில் 200 ஏக்கர் நிலமும், 25 ஏக்கர் பங்களா நிலமும், உள்ளதற்கான சாட்சியங்களை நீதிமன்றத்தில் அவர் படித்துக்காண்பித்தார்.
1991 ம் ஆண்டு ஜூலைத்திங்கள் முதல் 1996 ம் ஆண்டு ஏப்ரல் திங்கள் வரையிலான அந்த ஐந்தாண்டுகளில் ஜெயலலிதா உள்ளிட்ட குற்றவாளிகள், சேர்த்த சொத்துக்களின் அன்றைய மதிப்பு பல லட்சங்கள். இன்று அதன் பதிப்பு 4 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் பெருகி உள்ளது” என்றும் பவானிசிங் தனது வாதத்தின் போது சுட்டிக்காட்டினார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன்,இளவரசி ஆகியோருக்கு எதிராக 1997 அக்டோபர் 21ம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. 259 சாட்சிகள் சேர்க்கப்பட்டனர். அதில், 39 சாட்சிகளைத்தவிர மற்றவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
சொத்துக்குவிப்பு வழக்கு 1.7.1991க்கு முன் இருந்த சொத்துக்கள் 1.7.1991 முதல் 30.4.1996 வரையிலான சேர்த்த சொத்துக்கள் என்று பிரிக்கப்பட்டுள்ளன. வழக்கு காலத்திற்கு முன் 2 கோடியே ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 953 மதிப்புள்ள சொத்து இருந்ததும், வழக்கு காலத்திற்கு பின் சொத்து மதிப்பு 64 கோடியே 42 லட்சத்து 89 ஆயிரத்து 616 சேர்த்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.
வழக்கில், குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளவர்களில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் ரத்த சம்பந்தமான உறவினர்கள் ஆவார்கள். முதல் குற்றவாளியும் இரண்டாவது குற்றவாளியும் ஒரே வீட்டில் குடியிருந்தார்கல் என்பதற்கான 9 ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. மேலும், 1 முதல் 4 வரையிலான குற்றவாளிகள் ஒருவருக்கொருவர் தொடர்புடையவர்கள் என்பதற்கான பல கம்பெனிகளின் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன.
அதன் மூலம் நான்கு குற்றவாளிகளும் கூட்டுச்சதி செய்து, முதல் குற்றவாளி முதல்வராக இருந்தபோது, அவரது அதிகாரத்தைப் பயன்படுத்தி, அவருக்காகவும், அவரைச்சார்ந்த மற்ற 3 குற்றவாளிகளூக்காகவும் சேர்த்து தங்களது வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை சேர்த்திருக்கிறார்கள் என்பதுதான் இந்த வழக்கின் நோக்கமாகும். குற்றம்சாட்டப்பட்டவர்கள் வருமானத்திற்கு அதிகம் சொத்து சேர்த்திருப்பதற்கான ஆவணங்கள் உள்ளன என்றார்.
அதனைத்தொடர்ந்து பவானிசிங், உதவி வழக்கறிஞர் முருகேஷ் மரடி, பல ஆண்டுகளுக்கு முன்பு பதியப்பட்ட சாட்சிகளின் விபரங்களை நீதிபதி முன்பு படித்துக் காண்பித்தார்சென்னை அருகே வாலாஜாபாத்தில் 600 ஏக்கர், சிறுதாவூரில் 25 ஏக்கர் பரப்பளவில் ஒரு பங்களா. நீலாங்கரையில் 2 ஏக்கர், கொடநாட்டில் 800 ஏக்கர் மற்றும் பங்களாக்கள்.
காஞ்சிபுரத்தில் 200 ஏக்கர், கன்னியாகுமரியில் மீனங்குளம், சிவரங்குளம், வெள்ளங்குளம் பகுதியில் 1,190 ஏக்கர், தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் பகுதியில் 200 ஏக்கர், ரெவரே அக்ரோ பார்ம் பெயரில் 100 ஏக்கர்.
ஹைதராபாத்தில் திராட்சைத் தோட்டம். 30 வண்ணங்களில் பலவித கார்கள் மற்றும் டிரக்கர்கள், வாலாஜாபாத்தில் ஜெயலலிதா தரப்பினர் வாங்கியிருப்பது 100 ஏக்கர் நிலம். இந்த 100 ஏக்கர் நிலத்தின் அரசு மதிப்பு 40 கோடி ரூபாய் – சந்தை மதிப்பு 50 கோடி ரூபாய்.
சிறுதாவூரில் வாங்கியிருப்பது 25.4 ஏக்கர். இந்த நிலத்தின் அரசு மதிப்பு 42.5 கோடி ரூபாய்; சந்தை மதிப்பு 50 கோடி ரூபாய். நீலாங்கரையில் இருக்கும் ஜெயலலிதா தரப் பினரின் 2 ஏக்கர் நிலத்தின் அரசு மதிப்பு 70 கோடி ரூபாய்; சந்தை மதிப்பு 100 கோடி
காஞ்சிபுரத்தில் ஜெயலலிதா தரப்பினர் வாங்கியுள்ள 200 ஏக்கர் நிலத்தின் அரசு மதிப்பு 60 கோடி ரூபாய்; சந்தை மதிப்பு 100 கோடி ரூபாய். கன்னியாகுமரியில் ஜெயலலிதா தரப்பினர் வாங்கியுள்ள 1,190 ஏக்கரின் அரசு மதிப்பு 175 கோடி ரூபாய்; சந்தை மதிப்பு 292 கோடி ரூபாய்.
பையனூரில் வாங்கியுள்ள 5 ஏக்கர் நிலத்தின் அரசு மதிப்பு 10 கோடி ரூபாய்; சந்தை மதிப்பு 15 கோடி ரூபாய். கொடநாட்டில் ஒரு ஏக்கர் நிலத்தின் அரசு மதிப்பு 3 கோடி ரூபாய்; சந்தை மதிப்போ 5 கோடி ரூபாய். அங்கே ஜெயலலிதா தரப்பினர் வாங்கியுள்ள 898 ஏக்கர் நிலத்தின் அரசு மதிப்பு 2,450 கோடி ரூபாய், சந்தை மதிப்போ 4,500 கோடி ரூபாய் என ஜெயலலிதா உள்ளிட்ட குற்றவாளிகளால் வாங்கப்பட்ட பல சொத்துக்கள் தொடர்பான விவரங்களையும், அது தொடர்பான சாட்சியங்களையும் நீதிமன்றத்தில் படித்துக்காண்பித்தார் அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானிசிங்.
இந்தப் பட்டியல்படி, 1991-96 – இந்த ஐந்து ஆண்டுகளில், ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது, வாங்கிப் போட்டுள்ள சொத்துக்களில், ஒரு பகுதி சொத்துக்களின் இன்றைய அரசு மதிப்பு 2,847 கோடியே 50 இலட்சம் ரூபாய்; சந்தை மதிப்போ 5,107 கோடி ரூயாய். இத்துடன் நகை, வைரம், கம்பெனி முதலீடுகள் போன்ற அசையும் சொத்துக்களின் மதிப்பையும் கணக்கில் சேர்த்தால் மேலும் பல கோடி ரூபாய் வரும். அதாவது ஜெயலலிதா முதல்வர் பொறுப்பை ஏற்காதபோது இருந்ததைவிட 310 மடங்கு அதிகச் சொத்துகளை ஐந்தாண்டுகளில் குவித்திருக்கிறார் என்று கூறி மலைக்கவைத்தார்
0 கருத்துகள்:
Post a Comment