Search This Blog n

03 December 2014

நடைபெற்ற பேச்சில் உடன்பாடு; டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ்;

சென்னையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. இதனால் சமையல் கியாஸ் சப்ளையில் பாதிப்பு இருக்காது.
சென்னை,
நாமக்கல் மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு தென்மண்டல பல்க் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர் கள் சங்கம் இயங்கி வருகிறது.
இந்த சங்கத்தின் கீழ் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சமையல் கியாஸ் டேங்கர் லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன.

5 மாநிலங்களில் உள்ள அனைத்து சமையல் கியாஸ் டேங்கர் லாரிகளும், மத்திய அரசின் பொதுத்துறை ஆயில் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் போன்றவற்றுடன் ஒப்பந்தம் அமைத்து இயக்கப்பட்டு வருகின்றன.
ஆயில் நிறுவனங்கள்
அதன்படி, கடந்த அக்டோபர் மாதம் 31-ந் தேதியுடன் மத்திய அரசின் பொதுத்துறை ஆயில் நிறுவனங்களுடனான ஒப்பந்தம் முடிவு பெற்றது. முன்னதாக ஒப்பந்தங்கள் 3 ஆண்டுகளாக இருந்தன. அதன் பின்னர், ஆயில் நிறுவனங்கள் 5 ஆண்டுகளாக மாற்றியது.

பின்னர், லாரி உரிமையாளர்கள் கேட்டுக்கொண்டதற்கு பிறகு, மீண்டும் 3 ஆண்டுகளாக ஒப்பந்தம் அமைக்கப்பட்டது. இதையடுத்து, இ-டெண்டர் முறையில் புதிய டெண்டரை ஆயில் நிறுவனங்கள் அறிவித்தது.
இதன்படி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் 1,683 வண்டிகளும், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் 853 வண்டிகளும், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் 696 வண்டிகளும் என 3 ஆயிரத்து 232 வாகனங்கள் தேவை என்று அறிவித்து இருந்தன.
பேச்சுவார்த்தை

ஆயில் நிறுவனங்கள் கேட்டது போல, சங்கத்தின் சார்பில் வண்டிகள் வழங்கப்பட்டன. இதில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் 33 வண்டிகளுக்கும், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் 5 வண்டிகளுக்கும் சில குறைகளை கூறி வேலைக்கான உத்தரவு வழங்கப்படவில்லை.

இதைத்தொடர்ந்து 38 வாகனங்களுக்கும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி டேங்கர் லாரி உரிமையாளர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து வேலைக்கான உத்தரவு வழங்கப்படாத 38 வாகனங்களுக்கும் உத்தரவு வழங்க கோரி எண்ணெய் நிறுவனங்களுடன் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் நேற்று நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்தியன் ஆயில் பவன் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சுமார் 2 மணி நேரத்துக்கு மேல் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து சமையல் கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றதாக அறிவித்தனர்.
இதுகுறித்து தென்மண்டல பல்க் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் நடராஜன் மற்றும் செயலாளர் கார்த்திக் ஆகியோர் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது:-
போராட்டம் வாபஸ்

வேலைக்கான உத்தரவு வழங்கப்படாத 38 வண்டிகளையும் எண்ணெய் நிறுவனங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டோம். எண்ணெய் நிறுவனங்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், அவர்கள் சட்டத்துக்கு உட்பட்டு, 38 வாகனங்களையும் மீண்டும் மறுபரிசீலித்து எங்களுக்கு ஆதரவாக செய்து தருவதாக உறுதியளித்துள்ளார்கள்.

இதைத்தொடர்ந்து எங்கள் வேலை நிறுத்தத்தை நாங்கள் வாபஸ் பெறுகிறோம். லாரிகளை பொறுத்தவரையில், ஏற்கனவே கியாஸ் நிரப்பிய லாரிகள் இயங்கி கொண்டு தான் இருக்கின்றன. புதிதாக கியாஸ் நிரப்பும் லாரிகள் தான் இயங்காமல் இருந்தன.
தற்போது அந்த லாரிகளும் இயங்கத்தொடங்கி விட்டன. பொதுமக்களுக்கு எந்த வித பாதிப்பும் இல்லை. அவர்களுக்கு கிடைக்கக்கூடிய சமையல் கியாஸ் தட்டுப்பாடின்றி கிடைக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment