தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுநிலை வலு இழக்கத்தொடங்கியுள்ளது என்றும், எனவே தமிழகத்தில் ஒருசில இடங்களில் மட்டும் இன்று மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை நிறைவடைந்து, தமிழ்நாட்டுக்கு அதிக மழை பொழிவை தருகிற வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்துவருகிறது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வந்தது.
காற்றழுத்த தாழ்வுநிலை வலு இழந்தது
இந்தநிலையில் வானிலை குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:–
இலங்கைக்கும், தமிழகத்துக்கும் இடையே தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை பலவீனமாகி வலுவிழக்கத்தொடங்கியுள்ளது. இதனால் நீடித்து பெய்து வந்த மழை குறையத்தொடங்கும்.
அடுத்த 24 மணி நேரத்தை பொருத்தமட்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது. சென்னையை பொருத்தமட்டில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகர் மற்றும் புறநகர் பகுதியில் ஒருசில இடங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்புகள் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
பாபநாசத்தில் 5 செ.மீ. மழை
நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர நிலவரப்படி அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் 5 செ.மீ. மழையும், நாங்குநேரியில் 4 செ.மீ. மழையும், மணிமுத்தாறில் 3 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், திருவள்ளூர் மாவட்டம் புழல், காஞ்சீபுரம் மாவட்டம் தரமணி, கோலப்பாக்கம், கடலூர் மாவட்டம் பரங்கிபேட்டையில் 2 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.சென்னை மாவட்டம் அண்ணா பல்கலைக்கழகம், திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி, செம்பரபாக்கம், காஞ்சீபுரம் மாவட்டம் தாம்பரம், நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை, திருச்சி மாவட்டம் மணப்பாறை, கடலூர் மாவட்டம் நெய்வேலி, கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட இடங்களில் தலா 1 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
0 கருத்துகள்:
Post a Comment