துவையில் மகான் அரவிந்தரால் உருவாக்கப்பட்ட அரவிந்தர் ஆசிரமம் உள்ளது. மேற்கு வங்காளம், பீகார், ஒரிசா, ஜார்கண்ட், உத்திர பிரதேசம், உத்ரகாண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களை சேர்ந்த அரவிந்தர் பக்தர்கள் தங்கள் சொத்துகளையும், உடமைகளையும் புதுவை அரவிந்தர் ஆசிரமத்திற்கு அளித்துவிட்டு ஆசிரமத்தில் தங்கி சேவை செய்து வருகின்றனர். இத்தகைய அரவிந்தர் பக்தர்கள் தங்குவதற்கான ஆசிரம நிர்வாகத்தின் சார்பில் புதுவை நகரில் ‘ஒயிட் டவுன்’ என அழைக்கப்படும் பகுதியில் பல குடியிருப்புகள் உள்ளது. இந்த குடியிருப்புகளில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கி சேவை செய்து வருகின்றனர்.ஆசிரம குடியிருப்பில் தங்கி சேவை செய்யும் பக்தர்களுக்கு என்று ஆசிரம நிர்வாகத்தால் பல விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறது. இந்த விதிமுறைகளை மீறுவோர் மீது நிர்வாகம் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு குடியிருப்பில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். இதேபோன்று புதுவை குருசுகுப்பத்தில் உள்ள ஆசிரம குடியிருப்பில் பீகார் மாநிலத்தை சேர்ந்த அருணாஸ்ரீ (வயது 52), ராஜஸ்ரீ (49), நிவேதிதா (42), ஜெயஸ்ரீ (54), ஹேமலதா (39) ஆகிய 5 சகோதரிகள் தங்கியிருந்து சேவை செய்து வந்தனர்.
இவர்களுடைய பெற்றோர் பிரசாத் (86), சாந்திதேவி (78) ஆகியோர் வேறொரு இடத்தில் தனியாக வீடு எடுத்து தங்கி இருந்தனர். ஆசிரமத்தில் தங்கியிருந்த சகோதரிகள் 5 பேரும் 5 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரம நிர்வாகிகள் சிலர் தங்களுக்கு பாலியல் தொல்லை அளிப்பதாக போலீசில் புகார் செய்தனர்.
மேலும், பத்திரிகைகளுக்கு நேரடியாக புகார் அளித்தனர். அதோடு ஆசிரம நிர்வாகத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும் முன் வைத்தனர். ஆசிரம சகோரிகளின் புகாரை புதுவை போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை. அதனால் கோர்ட்டு மூலம் புகாரை பதிவு செய்ய உத்தரவு பெற்றனர். இதனால் ஆசிரம விதி முறைகளை மீறி போலீசில் புகார் அளித்ததால் 5 சகோதரிகளையும் ஆசிரம குடியிருப்பில் இருந்து வெளியேற ஆசிரம நிர்வாகம் உத்தரவிட்டது. ஆனால், குடியிருப்பில் இருந்து வெளியேற சகோதரிகள் மறுத்து விட்டனர்.
அதோடு ஆசிரம நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு ஆசிரம நிர்வாகத்துக்கு சாதகமாக தீர்ப்பளித்தது. ஆசிரம குடியிருப்பில் இருந்து சகோதரிகள் வெளியேறவும் உத்தரவிட்டது. இதனையடுத்து சகோதரிகள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு 6 மாத கால அவகாசம் அளித்து குடியிருப்பில் இருந்து வெளியேற உத்தரவிட்டது. இதனால், சகோதரிகள் ஆசிரம நிர்வாகத்தை எதிர்த்த போதிலும் குடியிருப்பிலேயே தங்கி இருந்தனர்.
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் 6 மாத கால அவகாசம் முடிவடைந்தது. இருப்பினும் சகோதரிகள் குடியிருப்பை விட்டு வெளியேறாமல் தொடர்ந்து அங்கேயே தங்கி இருந்தனர். இதனையடுத்து நேற்று ஆசிரம நிர்வாகம் கோர்ட்டு உத்தரவை காட்டி போலீசார் மூலம் சகோதரிகளை குடியிருப்பில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுத்தது.
இதனை அறிந்த சகோதரிகள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்களை வெளியேற்றினால் கூட்டாக தற்கொலை செய்வோம் என மிரட்டல் விடுத்தனர். 5 பேரில் இளைய சகோதரியான ஹேமலதா குடியிருப்பின் 4–வது மாடியான மொட்டை மாடிக்கு சென்று தங்களை வெளியேற்றினால் குதித்து தற்கொலை செய்ய போவதாக மிரட்டல் விடுத்தனர். ஹேமலதாவின் மற்ற சகோதரிகள் 4 பேரும் கீழ்தளத்தில் நின்றபடி அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து குடியிருப்பில் இருந்து வெளியேற மறுத்தனர்.
தகவல் அறிந்த புதுவை பெரியகடை போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் தற்கொலை முடிவை கைவிட்டு ஹேமலதாவை கீழே இறங்கி வரும்படி வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், ஹேமலதா கீழே வர மறுத்துவிட்டார். இதற்கிடையே ஹேமலதாவிடம் பேட்டி எடுக்க பத்திரிகையாளர்கள் மொட்டை மாடிக்கு சென்றனர். அவர்களில் ஒருவராக சாதாரண உடையில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சஜீத்தும் சென்றார். அவர் ஹேமலதாவை கீழே குதிக்க விடாமல் பிடித்து கொண்டார். பின்னர் அவரை பெண் போலீசார் மீட்டு கொண்டு வந்தனர்.
சகோதரிகள் 5 பேரையும் அங்கிருந்து வலுக்கட்டாயமாக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். பின்னர் அவர்களை சமாதானபடுத்தி அனுப்பி வைத்தனர். அவர்கள் தங்கள் பெற்றோர் தங்கியிருக்கும் வீட்டுக்கு செல்வதாக கூறி விட்டு சென்றனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணி அளவில் 5 சகோதரிகளும் தாய், தந்தை ஆகியோரும் காலாப்பட்டு பகுதிக்கு சென்றனர். அங்கு 7 பேரும் கைகோர்த்தபடி கடலுக்குள் இறங்கினார்கள். அப்போது அங்கிருந்த மீனவர்கள் இதை பார்த்துவிட்டனர். உடனே ஓடி சென்று அவர்களை தடுக்க முயன்றனர். ஆனால் 7 பேரும் தண்ணீருக்குள் அதிக தூரத்துக்கு சென்றுவிட்டனர். அவர்களை அலை இழுத்து சென்றது.
மீனவர்கள் நீந்தி சென்று 4 பேரை மீட்டனர். 3 பேரை அலை இழுத்து சென்று விட்டது. அவர்கள் 3 பேரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். சிறிது நேரத்தில் அவர்களுடைய உடல் கரையில் ஒதுங்கியது. கடலில் மூழ்கி இறந்தவர்கள் தாயார் சாந்திதேவி, சகோதரிகள் அருணாஸ்ரீ, ராஜஸ்ரீ என்று தெரியவந்தது. இதுபற்றி தகவல் அறிந்து கோட்டக்குப்பம் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். மீட்கப்பட்ட தந்தை பிரசாத், நிவேதிதா, ஜெயஸ்ரீ, ஹேமலதா ஆகியோர் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>!
0 கருத்துகள்:
Post a Comment