பஸ்சில் பயணம் செய்து கொண்டிருந்த சகோதரிகள் இரண்டு பேரை கிண்டல் செய்த இளைஞர்களுக்கு தர்ம அடி கொடுத்த சம்பவம் அரியானாவில் நடந்துள்ளது. வெள்ளிக்கிழமை அன்று, ரோதக் கிராமத்திலிருந்து கல்லூரிக்கு சகோதரிகள் இருவரும் பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். கூட்டமாக இருந்த அந்த பஸ்சில், மூன்று பேர், சகோதரிகளை ஆபாசமாக கிண்டல் செய்துள்ளனர். சகோதரிகள் அவர்களை எச்சரித்த போதும், தொடர்ந்து கிண்டல் செய்தவர்களை சகோதரிகள் தாக்க தொடங்கினர்.
இளைஞர்கள் சகோதரிகளை பஸ்சிலிருந்து கீழே தள்ளிவிட்ட போதும், சக பயணிகள் யாரும் சகோதரிகளுக்கு உதவவில்லை. இந்நிலையில், இந்த சம்பவம் மீடியாவின் மூலம் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, மூன்று பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து சகோதரிகளில் ஒருவர் கூறுகையில், பஸ்சில் நாங்கள் பயணம் செய்த போது, மூன்று பேரும் துண்டுச்சீட்டில் எண்களை எழுதி எங்கள் மீது வீசினர். இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்த போதும், அவர்கள் எங்களை அவதூறாக பேசி மோசமாக எங்களை திட்டினர். இதனால் பொறுமையிழந்து அவர்களை நான் தாக்கினேன். மூன்று பேரில் ஒருவர் எனது சகோதரியின் கைகளை இறுக்கமாக பிடித்து கொண்டான். மற்றொருவன், எனது கழுத்தை பிடித்து நெறித்தான். இதனால் எனது சகோதரி பெல்ட் மூலம் தாக்க துவங்கினார் என கூறினார்.
இதன் பின்னர், மூன்று பேரும் எங்களை பஸ்சிலிருந்து கீழே தள்ளிவிட்டனர். இதில் எங்களுக்கு பலத்த காயமடைந்தது எனவும் கூறினார். இந்த சம்பவம் நடந்த போது, பஸ்சில் பயணித்த பயணிகள் யாரும் எங்களுக்கு உதவாமல் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். இதன்பின் சகோதரிகள் தங்கள் பெற்றோரிடம் தகவல் தெரிவித்தனர். அவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என போலீசார் கூறியுள்ளனர். இதனிடையே, சகோதரிகளின் பெற்றோர்கள் இந்த விவகாரத்தில் உள்ளூர் பஞ்சாயத்தை அனுக முடிவெடுத்துள்ளனர்.
0 கருத்துகள்:
Post a Comment