வந்தவாசியைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை வந்தவாசி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு எடுத்து வருவர்.
இதற்கென ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 4 கிடங்குகள் உள்ளன. மேலும், திறந்தவெளியிலுள்ள களத்திலும் மூட்டைகள் இறக்கி வைக்கப்படும்.
கடந்த வியாழக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை இரவு வரை நெல் மூட்டை வரத்து அதிகமாக இருந்தது.
இதனால் 4 கிடங்குகளில் மொத்தம் சுமார் 8 ஆயிரம் மூட்டைகளும், திறந்தவெளிக் களத்தில் சுமார் 4 ஆயிரம் மூட்டைகளும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் தார்ப்பாயால் மூடப்பட்டிருந்தன.
ஒழுங்குமுறை விற்பனைக் கூட வியாபாரி ஒருவர் இறந்துவிட்டதால் மூட்டைகளை எடை போடும் பணி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெறவில்லை.
இந்த நிலையில், திங்கள்கிழமை அதிகாலை பெய்த மழையால் திறந்தவெளிக் களத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மூட்டைகளில் சுமார் 2 ஆயிரம் நெல் மூட்டைகள் நனைந்து சேதம் அடைந்தன.
இதனால் கோபமடைந்த விவசாயிகள், ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் வந்தவாசி- மேல்மருவத்தூர் சாலையில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நெல் எடை போடும் பணியை துரிதமாக நடத்த வேண்டும், திறந்தவெளிக் களம் மீது மேற்கூரை அமைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த சாலை மறியல் நடைபெற்றது.
வந்தவாசி வட்டாட்சியர் எஸ்.வி.ஜெயந்தன், டிஎஸ்பி மகேந்திரன், ஒழுங்குமுறை விற்பனைக்கூடக் கண்காணிப்பாளர் வேலன் உள்ளிட்டோர் சமரசம் செய்த பின், மறியல் கைவிடப்பட்டது
0 கருத்துகள்:
Post a Comment