சென்னை: சென்னை துரைப்பாக்கத்தில் வாகனத்தில் சென்ற பெண் ஒருவரிடம் பட்டப் பகலில் பட்டா கத்திமுனையில் மிரட்டி நகைகளை கொள்ளையடித்த சம்பவத்தின் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துரைப்பாக்கத்தை சேர்ந்தவர் வேலம் செந்தில்.. எம்.சி.என் நகரில் வசித்து வருகிறார். தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றும் அவர் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணி அளவில் தனது பணியை முடித்து வீடு திரும்பி கொண்டிருந்தபோது மர்ம நபரால் வழிமறிக்கப்பட்டார்.
அப்போது பதற்றமடைந்து கீழே விழுந்த வேலம் மீது பெரிய அளவிலான கத்தியை நீட்டி அவரிடம் உள்ள நகைகளை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லை என்றால் கொன்றுவிடுவேன் என்று மர்ம நபர் மிரட்டியுள்ளார். அந்த சமயத்தில் மற்றொரு நபர் அருகே இருந்த சந்துப் பகுதியிலிருந்து வந்து மிரட்டலில் இணைந்துள்ளார்.
இதனை அடுத்து பயத்தில் தான் அணிந்திருந்த நகைகளை கழட்டி வேலம் தந்துள்ளார். சென்னை நகரில் பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளைச் சம்பவத்தின் காட்சிகள் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் நபரால் ஜன்னல் வழியாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டது. சென்னையில் நடந்த இந்த கொள்ளைச் சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதை அடுத்து எம்.சி.என் நகரைச் சேர்ந்தவர்களால் இந்த கொள்ளை குறித்து துரைப்பாக்கம் போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் வீடியோவை ஆதாரமாக கொண்டு விசாரணையை தொடங்கியுள்ளனர். ஆசிரியையிடமும் கொள்ளையர்களின் அடையாளங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
0 கருத்துகள்:
Post a Comment