தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனைத்து வகை மின் நுகர்வோருக்கும் 15 சதவீத மின் கட்டண உயர்வை அறிவித்துள்ளது.
மின் கட்டண உயர்வு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. இதனால் 2 மாதங்களுக்கு 100 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவோருக்கு யூனிட்டுக்கு ரூ.2.60 என்று இருந்த கட்டணம் ரூ.3.25 ஆகிறது. 200 யூனிட் வரை ரூ.2.80–ல் இருந்து ரூ.3.25 ஆகவும், 201 முதல் 500 யூனிட் வரை யூனிட் ரூ.4.60 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
501 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தினால் யூனிட் ஒன்று ரூ.5.75–ல் இருந்து ரூ.6.60 ஆக அதிகரித்திருக்கிறது. இதுபோல் வழிபாட்டுத் தலங்கள், குடிசைகள், குறுந்தொழில் செய்வோருக்கும் 15 சதவீதம் மின் கட்டணம் உயர்கிறது. தொழிற்சாலைகளுக்கு யூனிட் ஒன்றுக்கு 85 காசு அதிகரிக்கிறது.
வணிக நிறுவனங்களில் 100 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தினால் யூனிட் ஒன்று ரூ.7ல் இருந்து ரூ.8.05 ஆக, அதாவது யூனிட்டுக்கு ரூ.1.05 அதிகரிக்கிறது. இதுபோல் நிலை கட்டணமும் அனைத்து தரப்பினருக்கும் உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின் கட்டணத்தை உயர்த்தினாலும் ஏழை, எளிய, நடுத்தர பிரிவு மக்களை பாதுகாக்க அவர்களுக்கான மின் கட்டண உயர்வை தமிழக அரசே ஏற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆண்டுதோறும் மின்சாரம் வாரியத்துக்கு 6 ஆயிரத்து 295 கோடியே 32 லட்சம் ரூபாய் வழங்கப்பட இருக்கிறது.
இதன் காரணமாக 2 மாதங்களுக்கு 500 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு மின்கட்டண உயர்வு இல்லை. ஏற்கனவே உள்ள அதே மின் கட்டணத்தை அவர்கள் செலுத்தினால் போதும் என்று முதல்–அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். இதனால் ஏழை, நடுத்தர மக்கள் பெருமூச்சு விட்டுள்ளனர்.
தமிழக அரசின் இந்த சலுகை காரணமாக தனி வீடுகளில் குடியிருப்போர், 500 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்தினால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை. ஆனால் பெரும்பாலான வாடகை வீடுகளில் குடியிருப்போருக்கான மின் கட்டணத்தை வீட்டின் உரிமையாளரே நிர்ணயம் செய்கிறார். இதனால் வாடகை வீட்டில் குடியிருப்போர் அரசு நிர்ணயித்துள்ள மின் கட்டணத்தை விட யூனிட்டுக்கு 2 மடங்கு கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.
சிலர் ஒரே காம்பவுண்டில் 4 அல்லது 5 வீடுகளை கட்டிவிட்டு அதற்கு ஒரே ஒரு மின் இணைப்பு பெறுகிறார்கள். இதனால் 2 மாதங்களில் அந்த காம்பவுண்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சேர்த்து 1000 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் செலவு ஆகிறது. ஒரு வீட்டுக்கு சராசரி 200 யூனிட் மின்சாரம் தான் ஆகிறது. ஆனால் மொத்த யூனிட் 1000 என்பதால் 1 யூனிட்டுக்கு ரூ.6.60 வீதம் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.
இதனால் 200 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தியவர்களும் யூனிட் ஒன்றுக்கு ரூ.3.25க்கு பதில் ரூ.6.60 செலுத்த வேண்டியது இருக்கிறது. ஏற்கனவே இதுபோல வீடுகளை வாடகைக்கு விட்டிருப்பவர்கள், அங்கு குடியிருப்பவர்களிடம் 1 யூனிட்டுக்கு ரூ.7 வரை வசூல் செய்து வருவதாக கூறப்படுகிறது.
உதாரணத்துக்கு வாடகை வீட்டில் குடியிருக்கும் ஒருவர் உரிமையாளரிடம் மின் கட்டணமாக ரூ.500 செலுத்துகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இந்த கட்டணம் கோடை காலத்தில் ஏ.சி. பயன்படுத்தும் போது இரு மடங்காக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்த மின் கட்டண உயர்வை பயன்படுத்தி யூனிட் ஒன்றுக்கு ரூ.10 வரை வசூலிக்க வாய்ப்பு உள்ளது. ஒரு சிலர் நேர்மையாக நடந்த கொண்டாலும், பெரும்பாலான வீட்டு உரிமையாளர்கள் மின்சாரத்துக்கு கூடுதல் கட்டணம் தான் வசூலிக்கிறார்கள் என்று வாடகை வீடுகளில் குடியிருப்போர் தெரிவிக்கிறார்கள்.
வணிக நிறுவனங்களில் 100 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தினால் யூனிட் ஒன்றுக்கு ரூ.1.05 அதிகரித்துள்ளது. எனவே, இந்த கட்டண உயர்வை வியாபாரிகள் பொருட்கள் மீது சுமத்த வாய்ப்புள்ளது. பெரும்பாலான வணிக நிறுவனங்கள், கடைகளில் குளிர்சாதன வசதி, பிரிட்ஜ், பிரீசர் போன்றவை 24 மணி நேரமும் இயங்கும்.
இதில் குளிர்பானங்கள் மற்றும் பல்வேறு பொருட்கள் வைக்கப்படுகின்றன. எனவே இந்த மின்கட்டண உயர்வு மற்ற பொருட்களின் பில்லில் எதிரொலிக்கும். இதுதவிர பேக்கரி, ஐஸ்கிரீம் கடைகளிலும்,
பால் விற்பனை நிலையங்களிலும் கட்டணமும் உயர வாய்ப்பு உள்ளதாக பலர் கருத்து தெரிவித்தனர். ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு மின் கட்டண உயர்வை தவிர்க்க அரசு முடிவு செய்துள்ளது.
என்றாலும் மின் கட்டண உயர்வால் பல்வேறு வழிகளில் குறிப்பாக வாடகை வீட்டில் வகிக்கும் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்று பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.
0 கருத்துகள்:
Post a Comment