டெல்லியில் இளம்பெண் கற்பழிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட கார் டிரைவர் 3 நாள் போலீஸ் காவலுக்கு அனுப்பப்பட்டார்.
கற்பழிப்பு
சர்வதேச வாடகை கார் புக்கிங் சேவை நிறுவனம், உபேர். இந்த நிறுவனத்தின் வாடகை காரில் கடந்த வெள்ளிக்கிழமை டெல்லியில் பயணம் செய்த 27 வயதான இளம்பெண் ஒருவர், கார் டிரைவரால் கற்பழிக்கப்பட்டார்.
அவரது புகாரின் பேரில், நேற்று முன்தினம் உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் அந்த கார் டிரைவர் சிவகுமார் யாதவ் (வயது 32) கைது செய்யப்பட்டார். அன்று இரவே அவர் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர், ஏற்கனவே கடந்த 2011–ம் ஆண்டு மற்றொரு கற்பழிப்பு வழக்கில் 7 மாதம் ஜெயிலில் இருந்தவர் ஆவார்.
போலீஸ் காவல்
டிரைவர் சிவகுமார் யாதவ் நேற்று முகத்தை மூடிய நிலையில், டெல்லி மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட்டு அம்பிகா சிங் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் முழுமையாக விசாரிக்க வேண்டி இருப்பதாலும், சம்பவத்தின்போது பயன்படுத்திய செல்போனை கைப்பற்ற வேண்டி இருப்பதாலும் அவரை போலீஸ் காவலுக்கு அனுப்புமாறு போலீசார் வலியுறுத்தினர்.
ஆனால், அதற்கு டிரைவரின் வக்கீல் வினித் மல்கோத்ரா எதிர்ப்பு தெரிவித்தார். போலீஸ் காவலுக்கு அனுப்பினால், அவர் சித்ரவதை செய்யப்பட வாய்ப்புள்ளது என்றும், எனவே, நீதிமன்ற காவலுக்கு அனுப்புமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
ஆனால், அதை நிராகரித்த மாஜிஸ்திரேட்டு, கார் டிரைவரை 3 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார். 11–ந் தேதி மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டார்.
அடையாள அணிவகுப்பு
தன்னை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்த கார் டிரைவர் சிவகுமார் யாதவ் எதிர்ப்பு தெரிவித்தார். மாஜிஸ்திரேட்டு எச்சரித்த பிறகும், அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.
கோர்ட்டு நடைமுறைகள் முடிவடைந்து, அவரை போலீஸ் வாகனத்தில் ஏற்றியபோது, அவரது முகத்திரையை அகற்றிய போலீசார், புகைப்படம் எடுக்க அனுமதித்தனர்.
தடை
இதற்கிடையே, வாடகை கார் புக்கிங் சேவை நிறுவனமான உபேருக்கு டெல்லி மாநில அரசு தடை விதித்தது. அந்நிறுவனத்தை கருப்பு பட்டியலில் சேர்த்தது.
அதன் பொது மேலாளர் ககன் பாட்டியாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். உபேர் நிறுவனம் மீதும் வழக்கு பதிவு செய்வது பற்றி பரிசீலித்து வருவதாக அவர்கள் கூறினர்.
நாடு முழுவதும்...
இதுபோல், உபேர் நிறுவனத்துக்கு நாடு முழுவதும் தடை விதிக்குமாறு அனைத்து மாநில அரசுகளையும் கேட்டுக்கொள்ளலாமா என்று மத்திய உள்துறை அமைச்சகம் பரிசீலித்து வருகிறது. இதுபற்றி மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் இன்று டெல்லி மேல்–சபையில் அறிக்கை தாக்கல் செய்கிறார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
0 கருத்துகள்:
Post a Comment