திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள கீழமருதூரை சேர்ந்தவர் பழனியப்பன் (40). இவரது மனைவி விஜயா. இவர்களுக்கு 2 ஆண், ஒரு பெண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் பிரிந்து சென்று விட்டனர்.
விஜயா தற்போது தனது குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் பழனியப்பனுக்கு அதே பகுதியை சேர்ந்த அமிர்தவள்ளியுடன் (30) பழக்கம் ஏற்பட்டது.
மாற்றுத் திறனாளியான இவர் நர்சிங் படித்து விட்டு ஆதிச்சபுரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பயிற்சி பெற்றுள்ளார்.
இந்த நிலையில் பழனியப்பன் கோவைக்கு கொத்தனார் வேலைக்கு சென்றார். அமிர்தவள்ளியையும் அங்கு அழைத்து சென்றார். அங்கு இருவரும் திருமணம் செய்யாமல் கணவன்–மனைவியாக வாழ்ந்து வந்தனர்.
இவர்களுக்கு கடந்த 38 நாட்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது. நேற்று முன்தினம் இவர்கள் சொந்த ஊருக்கு வந்தனர். இந்த நிலையில் ஆதிச்சபுரம் வேதபுரம் சாலையில் வயலில் பழனியப்பன் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது முகம் சேற்றில் அமுக்கி வைக்கப்பட்டு இருந்தது.
அமிர்தவள்ளி கூத்தாநல்லூர் சாலையில் அரிச்சந்திரா நதியில் பிணமாக கிடந்தார். அவர்களது குழந்தை என்ன ஆனது என்பது தெரியாமல் இருந்து வந்தது. அதனை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் அமிர்த வள்ளி கொலை செய்யப்பட்ட இடத்தின் அருகில் கூத்தா நல்லூர் ரோட்டில் குன்னியூர் பஸ் நிறுத்தம் அருகே உள்ள வயல்வெளியில் குழந்தை கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்ததை போலீசார் பார்த்தனர். குழந்தை உடலை மீட்டனர்.
இக்கொலை தொடர்பாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அனார்கலி பேகம், திருத்துறைப்பூண்டி டி.எஸ்.பி. அப்பாசாமி, மன்னார்குடி இன்ஸ்பெக்டர் நாகராஜன், கோட்டூர் இன்ஸ்பெக்டர் ஆனந்த பத்மநாபன், சப்–இன்ஸ்பெக்டர் சுப்ரியா ஆகியோர் தீவிர விசாரணையில் இறங்கினர். அப்போது 3 பேரையும் பழனியப்பன் சகோதரர்கள் கவுரவ கொலை செய்ததது தெரிய வந்தது.
இது தொடர்பாக பழனியப்பன் சகோதரர்கள் ராமகிருஷ்ணன் (43), சுப்பிரமணியன் (45), அவர்களது உறவினர் மகேந்திரன், ராமகிருஷ்ணனின் நண்பர் துரைராஜ் ஆகிய 4 பேரை கைது செய்தனர். போலீசில் பழனியப்பன் சகோதரர்கள் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:–
பழனியப்பனுக்கு 2 ஏக்கர் நிலமும், ½ ஏக்கரில் வீட்டு மனையும் உள்ளது. அவர் வேறு பிரிவை சேர்ந்தவருடன் குடும்பம் நடத்தி வந்ததால் சொத்து அந்த பெண்ணிற்கு சென்று விடும் என நினைத்தோம். மேலும் பழனியப்பனுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்தது. இதற்காக அவரை கட்டி வைத்து அடித்துள்ளோம்.
ஆனாலும் அவர் மாற்று சமுதாயத்தை சேர்ந்த பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்ததால் அவமானம் ஏற்பட்டது. இதனால்தான் 3 பேரையும் கவுரவ கொலை செய்தோம்.
நேற்று முன்தினம் அவர் ஊருக்கு வருவதை அறிந்து கொண்டோம். அவர்கள் ஆதிச்சபுரம் ஆர்ச் பகுதியில் இறங்கினார்கன். பின்னர் பழனியப்பன் மது குடிக்க சென்றார். மது குடித்து விட்டு வந்தவுடன் அவரது கழுத்தை நெரித்து சேற்றில் அமுக்கி கொன்றோம். அமிர்தவள்ளியை இரு சக்கர வாகனத்தில் அழைத்து சென்று ஆற்றில் தண்ணீரில் மூழ்கடித்தோம். குழந்தையை கொன்று வயலில் வீசினோம்.இவ்வாறு போலீசில் கூறி உள்ளனர்.
38 நாட்களே ஆன குழந்தை உள்பட 3 பேரை கவுரவ கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
0 கருத்துகள்:
Post a Comment