40 ஆண்டுகளுக்கு முன்பு, ரெயில் நிலைய குண்டு வெடிப்பில் அப்போதைய ரெயில்வே மந்திரி எல்.என்.மிஸ்ரா கொல்லப்பட்ட வழக்கில், 4 பேர் குற்றவாளிகள் என்று கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
குண்டு வெடிப்பு
கடந்த 1975–ம் ஆண்டு ஜனவரி 2–ந் தேதி, பீகார் மாநிலம் சமஷ்டிபூர் ரெயில் நிலையத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், அப்போதைய ரெயில்வே மந்திரி எல்.என்.மிஸ்ரா கலந்து கொண்டார். அப்போது நடந்த குண்டு வெடிப்பில், அவர் படுகாயம் அடைந்தார். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர், மறுநாள் உயிரிழந்தார்.
அவருடன் மேலும் இரண்டு பேர் பலியானார்கள். 7 பேர் காயம் அடைந்தனர்.
இந்த குண்டு வெடிப்பில், ஆனந்த மார்க்கம் அமைப்பைச் சேர்ந்த சிலர் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த அமைப்பைச் சேர்ந்த வக்கீல் ரஞ்சன் திவிவேதி, சந்தோஷானந்தா அவதுதா, சுதேவானந்தா அவதுதா, கோபால்ஜி உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் பின்னாளில் இறந்து விட்டார்.
குற்றப்பத்திரிகை
குற்றம் சாட்டப்பட்ட 4 பேர் மீதும் கடந்த 1977–ம் ஆண்டு நவம்பர் 1–ந் தேதி, பாட்னாவில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அப்போதைய அட்டார்னி ஜெனரல் சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டதன் பேரில், இவ்வழக்கு விசாரணை, 1979–ம் ஆண்டு டெல்லியில் உள்ள மாவட்ட கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது.
அரசுத்தரப்பு சாட்சிகளாக 161 பேரும், எதிர்த்தரப்பு சாட்சிகளாக 40 பேரும் விசாரிக்கப்பட்டனர்.
தீர்ப்பு
விசாரணை முடிவடைந்த நிலையில், கடந்த செப்டம்பர் 12–ந் தேதி, தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. நவம்பர் 10–ந் தேதி அளிக்கப்படுவதாக இருந்த தீர்ப்பு, பின்னர், டிசம்பர் 8–ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இவ்வழக்கில் மாவட்ட நீதிபதி வினோத் கோயல் நேற்று தீர்ப்பு அளித்தார். குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் குற்றவாளிகள் என்று அவர் தீர்ப்பு அளித்தார்.
இ.பி.கோ. 302 (கொலை), 120 பி (குற்றச்சதி), 326 (பயங்கர ஆயுதங்களால் கொடுங்காயம் ஏற்படுத்துதல்), 324 ஆகிய பிரிவுகளின் கீழும், வெடிபொருள் சட்டத்தின் கீழும் அவர்கள் குற்றவாளிகள் என்று தீர்ப்பு அளித்தார்.
தண்டனை எவ்வளவு?
அவர்களுக்கான தண்டனை அளவு தொடர்பான விவாதம், 15–ந் தேதி நடைபெறும் என்றும் நீதிபதி அறிவித்தார். 4 பேரும் தற்போது ஜாமீனில் உள்ளனர். அவர்களை உடனடியாக காவலில் எடுக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு பிறப்பிக்கப்பட்ட இந்த தீர்ப்பால், குற்றவாளிகள் தரப்பு அதிர்ச்சி அடைந்தது. இதை எதிர்த்து அப்பீல் செய்யப்போவதாக அவர்களின் வக்கீல்கள் தெரிவித்தனர்.
குற்றவாளிகளில், சந்தோஷானந்தா, சுதேவானந்தா ஆகியோர் 1975–ம் ஆண்டு மார்ச் 20–ந் தேதி, அப்போதைய சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஏ.என்.ரேயை கொல்ல முயன்ற வழக்கில், 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
Post a Comment