மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சக ஆவணங்கள் திருட்டு வழக்கில் 13 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
ஆவணங்கள் திருட்டு
மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தில் உள்ள முக்கிய ஆவணங்கள் திருடப்பட்டு அவை சில குறிப்பிட்ட தனியார் நிறுவனங்களுக்கு அதிக விலைக்கு விற்கப்பட்டன. இதன்மூலம் அந்த தனியார் நிறுவனங்கள் பலன் அடைந்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக டெல்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
இதில் கடந்த பிப்ரவரி மாதம் 20–ந் தேதி 5 தனியார் நிறுவன அதிகாரிகளை கைது செய்தனர். ஆவணங்களை திருடிக்கொடுப்பதற்காகவே அவர்கள் சிலருக்கு மாதந்தோறும் பெரிய அளவில் பணம் கொடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கில் இதுவரை மொத்தம் 16 பேர் கைது செய்யப்பட்டனர். 2 தனித்தனி வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
42 பேர் சாட்சிகள்
ஷைலேஷ் சக்சேனா (ஆர்.ஐ.எல். நிறுவனம்), வினய்குமார் (எஸ்ஸார்), கே.கே.நாயக் (கெய்ரன்ஸ் இந்தியா), சுபாஷ் சந்திரா (ஜுபிலன்ட் எனர்ஜி), ரிஷி ஆனந்த் (ரிலையன்ஸ் அடாக்) ஆகிய 5 பேர் தனியார் நிறுவனங்களின் அதிகாரிகள்.
மற்ற 8 பேர் ஐஷ்வர்சிங், ஆஷாராம், ராஜ்குமார் சவுபே, லால்தா பிரசாத், ராகேஷ்குமார், விரேந்தர் குமார், எரிசக்தி ஆலோசகர் பிரயாஸ் ஜெயின், பத்திரிகையாளர் சாந்தனு சைகியா. இவர்கள் 13 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் உள்ளனர். அவர்களிடம் இருந்து அமைச்சக ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் 42 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
அறிக்கை தாக்கல்
பெட்ரோலியம் மற்றும் உள்துறை அமைச்சகங்கள் இந்த வழக்கில் குற்றவாளிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் எத்தகையவை என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கடந்த 10–ந் தேதி கோர்ட்டு உத்தரவிட்டது.
15–ந் தேதி பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தாக்கல் செய்த அறிக்கையில், குற்றவாளிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 8 ஆவணங்கள் இயற்கையாக வகைப்படுத்தப்பட்டவை என்று தெரிவித்தது.
குற்றப்பத்திரிகை தாக்கல்
இந்த வழக்கில் 13 பேர் மீது நேற்று மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட்டு ஆகாஷ் ஜெயின் முன்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இவர்கள் மீது 44 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 13 பேர் மீதும் ஆவணங்கள் கடத்துதல், திருட்டு, மோசடி, போலி ஆவணங்கள் தயாரித்தல் மற்றும் பயன்படுத்துதல், குற்ற சதித்திட்டம் தீட்டுதல் உள்பட பல்வேறு பிரிவுகளில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தலைமை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட்டு சஞ்சய் நேற்று விடுமுறை என்பதால் நாளை (திங்கட்கிழமை) அவர் இந்த குற்றப்பத்திரிகையை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணை தொடர்கிறது
குற்றவாளிகள் மீது இதுவரை கடுமையான அலுவலக ரகசியங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த வழக்கில் இன்னும் தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது என்று போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
0 கருத்துகள்:
Post a Comment