இந்தியாவில் முதல்முறையாக திருச்சி மாவட்ட நீதிமன்றம், சிகிச்சை குறைபாட்டினால் மருத்துவர்களுக்கு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கடுவனூர் அரசு உயர்நிலை பள்ளியில், கடந்த 2008ம் ஆண்டு, யூலை மாதம் 28ம் திகதி, பெரம்பலூர் ஜோசப் கண் மருத்துவமனையும், விழுப்புரம் பார்வை தடுப்பு சங்கமும் இணைந்து இலவச கண்மருத்துவ சிகி்ச்சை முகாம் நடத்தியது.
இதில் கண்ணில் குறைபாடு உள்ள 66 பேரை தேர்ந்தெடுத்து, கண்புரை அறுவை சிகிச்சை செய்ய பெரம்பலூர் ஜோசப் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஆனால் அங்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு, கண்ணில் சீழ் வடிய ஆரம்பித்தது.
இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சென்று முறையிட்டதால், அவர்களை திருச்சி மருத்துவமனைக்கு மாற்றி மீண்டும் அறுவை சிகிச்சை செய்தனர். ஆனாலும் அந்த 66 பேருக்கும் அடுத்தடுத்து பார்வை பறிபோனது.
கடந்த 8 வருடங்களுக்கு முன் தமிழகத்தை உலுக்கிய இந்த சம்பவத்தை மருத்துவ கல்வி இயக்குநரே நேரில் விசாரணை நடத்தினார்.
இந்த விசாரணையில், இலவச கண் சிகிச்சை முகாம் நடத்த, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் முறையாக
அனுமதி பெறவில்லை என்றும், அறுவை சிகிச்சைக்கு முன்பாக நோயாளிகளுக்கு செய்யப்பட வேண்டிய முறையான பரிசோதனைகள் எதுவும் செய்யப்படவில்லை எனவும் தெரியவந்தது.
மேலும், இந்த 66 பேருக்கும் கண்ணில் ”சூடோமோனோ” என்ற நோய்த் தொற்று ஏற்பட்டதால் தான், அவர்களுக்கு நிரந்தரமாக பார்வை பறிபோக காரணம் எனத் தெரியவந்தது.
இதையடுத்து கண் பார்வை பாதித்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி, மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கவும் உத்தரவிட்டது.
திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில் கடந்த 10ம் திகதி விசாரணை நிறைவடைந்தது.
இதையடுத்து திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதர் வழங்கிய தீர்ப்பில், ஜோசப் கண் மருத்துவமனை
இயக்குனர் மருத்துவர் நெல்சன் ஜேசுதாசன், மருத்துவமனை நிர்வாகி கிறிஸ்டோபர் தாமஸ், மருத்துவர் அசோக் ஆகியோருக்கு தலா ஒரு ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்ட்து.
மருத்துவர்கள் சௌஜன்யா, தென்றல், அவ்வை மற்றும் ஆன்ட்ரூஸ் ஆகியோரை விடுதலை செய்து உத்தரவிடப்பட்டது.
வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மருத்துவர்கள் சௌஜன்யா, தென்றல் ஆகியோர் மீது இந்திய மருத்துவ கழகம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும், கவனக்குறைவாக சிகிச்சையளித்த மருத்துவர்கள் நீதிமன்றத்தால் தண்டனை பெற்றிருப்பது இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
Post a Comment