ஏழைகளுக்காக பாடுபடுகிற மத்திய அரசின் திட்டங்களை, மக்களிடம் போய்ச் சொல்லுங்கள் என்று பாரதீய ஜனதா எம்.பி.க்களை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.
எம்.பி.க்கள் கூட்டம்
பாராளுமன்ற மக்களவை, பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வுக்காக இன்று (திங்கட்கிழமை) கூடுகிறது. இதையொட்டி டெல்லியில் நேற்று நடந்த கூட்டத்தில் பாரதீய ஜனதா எம்.பி.க்கள் மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நீங்கள் அனைவரும் தலை நிமிர்ந்து நில்லுங்கள். நம்பிக்கையுடன் இருங்கள். மக்களுக்காக நாம் என்ன செய்கிறோம் என்பதை அவர்களுக்கு சொல்லுங்கள். அவர்கள் உங்களை புகழ்வார்கள்.
நான் எடுக்கிற எல்லா முடிவுகளும், ஏழைகளின் நலனுக்கானவை.
ஏழைகளுக்காக
சிலருக்கு பாரதீய ஜனதாவை குறைகூறுவதே வேலையாகப் போய்விட்டது. அவர்களுக்கு குறைகூறுகிற உரிமை உண்டு. ஆனால், அப்படி குறை கூறுகிறபோது- தங்களை நடுநிலையாளர்கள் என்று சொல்கிற உரிமை அவர்களுக்கு கிடையாது.
சின்னச் சின்ன விஷயங்களை தொடர்ந்து பெரிதுபடுத்துகிறார்கள். நல்ல பணிகளை பாராட்டுவதற்கு அவர்களிடம் ஏதுமில்லை.
நான் எப்போதுமே ஏழைகளைப் பற்றித்தான் பேசுகிறேன். அவர்களுக்காகத்தான் நாம் உழைக்கிறோம். செய்தியில் வரவேண்டும் என்பதற்காக நாம் உழைக்கவில்லை. நாம் அப்படி அவர்களுக்காக உழைக்காவிட்டால், நாம் நிம்மதியாக தூங்க முடியாது என்பதால் ஏழைகளுக்காக உழைக்கிறோம். நாம் ஏழைகளுக்காகவே வாழ்கிறோம். நாம் அதிகாரத்திற்கு ஆசைப்பட்டு பொது வாழ்க்கையில் ஈடுபடவில்லை. ஏழை மக்களின் நலனுக்காகத்தான் ஈடுபடுகிறோம்.
அதிகமாக செயலில் இறங்குங்கள்
சிலர் நல்லது எதையும் கேட்பதில்லை என்று தீர்மானித்து விட்டார்கள். நல்லது எதையும் சொல்வதில்லை என்று முடிவு செய்து விட்டார்கள். நாம் அவர்களுக்காக நேரத்தை வீணாக்க கூடாது. நாம் கூறுவதை கேட்க விரும்புகிறவர்கள் மீது கவனத்தை செலுத்த வேண்டும்.
நீங்கள் இன்னும் செயலில் அதிகமாக இறங்க வேண்டும். நாம் எல்லோரும் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை மக்களிடம் போய்ச் சொல்லுங்கள். ஊடகங்கள் என்ன சொல்கின்றன என்பதைப் பற்றி யோசிக்காதீர்கள்.
ஏழைகளுக்கான அரசு
நமது அரசு ஏழைகளுக்கானது. பிரதம மந்திரி மக்கள் நிதி திட்டம், நேரடி மானிய திட்டம் போன்றவற்றை அமல்படுத்தி உள்ளோம். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புறுதி திட்டத்தில் தவறுகள் நடைபெறாமல் பார்த்துக் கொள்ள முயற்சி எடுக்கிறோம்.
இதையெல்லாம் மக்களிடம் போய் பிரசாரம் செய்யுங்கள். முந்தைய அரசுகள் செய்ததையும், நமது அரசு செய்வதையும் ஒப்பிட்டு சொல்லுங்கள். தேசிய ஊரக வேலை வாய்ப்புறுதி திட்டத்தை அமல்படுத்துவதில் நாட்டில் எங்கேனும் முறைகேடுகள் காணப்பட்டால், எனக்கு கடிதம் எழுதுங்கள்.
இழப்பீடு
நமது நோக்கம் எல்லாம், ஏழைகள் பலன் அடைவதாகத்தான் இருக்க வேண்டும். கிராம மக்கள் வாங்கும் திறனைப் பெற்றால், நமது கிராமங்களும், நகரங்களும் முன்னேறுவதற்கு உதவியாக இருக்கும்.
முந்தைய காலத்திலும் ஆலங்கட்டி மழை பெய்து, விவசாயிகளுக்கு பயிர்ச்சேதங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால் இப்போது எடுத்தது போன்ற முடிவுகள் முன் ஒருபோதும் எடுக்கப்பட்டதில்லை. முன்பு குறைந்த பட்சம் 50 சதவீதம் பயிர்ச்சேதம் கண்டிருந்தால்தான் இழப்பீடு. இப்போதோ 33 சதவீத அளவுக்கு பயிர்ச்சேதம் இருந்தாலும், இழப்பீடு என்று துணிச்சலான முடிவு எடுத்துள்ளோம். இழப்பீட்டின் அளவும் ஒன்றரை மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதிவேக வளர்ச்சி
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா மட்டுமல்ல, உலக வங்கியின் தலைவர், சர்வதேச நிதியத்தின் தலைவர் என அனைவருமே, உலகளவில் பொருளாதாரத்தில் இந்தியா அதிவேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் நாடு என்பதை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
எனது 3 நாடுகள் பயணம் முழுமையாக முன்னிலைப்படுத்தப்படவில்லை. 36 ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு பிரான்சுடன் ஒப்பந்தம் என்கிற அளவில்தான் மக்களுக்கு சொல்லப்பட்டுள்ளது.
சாமானிய மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக எனது அரசு, ஓய்வு ஒழிச்சலின்றி பாடுபடுகிறது. எல்லோருக்கும் வீடுகள் வழங்கும் திட்டத்துக்காக பணியாற்றிக்கொண்டிருக்கிறோம். இதில் பலன்பெறப்போவது பணக்காரர்களா? சில டி.வி. சேனல்களின் அதிபர்களா? முகேஷ் அம்பானிக்காக ஒரு வீடு கட்டுகிறோமா? இவர்களில் யாருக்கு வீடு இல்லை?
குடும்பத்துக்கு ஒரு வீடு இல்லை, இதற்கு
முந்தைய அரசுகள்தான் காரணம் என்று கூறினால் அது குற்றமா? சுதந்திரத்துக்கு பின்னர் வீடு இல்லாதவர்களின் எண்ணிக்கை பெருகி வந்திருக்கிறது என்று கூறுவதில் உண்மை இல்லையா? ஒவ்வொரு ஏழை குடும்பத்துக்கும் ஒரு வீடு கிடைக்க வேண்டும் என எண்ணுவது கெட்ட கனவா?
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
0 கருத்துகள்:
Post a Comment