காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்கள் மசரத் ஆலம், கிலானியை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யாதது ஏன்? என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
எந்த பிரிவில் கைது
காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் நடந்த பேரணியில் பாகிஸ்தான் கொடியை ஏந்தியும், இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை கூறியும் சென்ற காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்கள் மசரத் ஆலம், சையது அலிஷா கிலானி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். முதலில் இருவரும் வீட்டு காவலில் வைக்கப்பட்டு, பின்னர் ஆலம் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய்சிங் கூறியதாவது:-
காஷ்மீர் மாநில அரசு எந்த சட்டத்தின்கீழ் மசரத் ஆலமும், கிலானியும் கைது செய்யப்பட்டார்கள் என்பதை தெரிவிக்க வேண்டும். சட்டவிரோதமாக கூடியதாக சாதாரண பிரிவுகளில் கைது செய்யப்பட்டதாக நாங்கள் அறிகிறோம். அவர்கள் துரோகம் செய்ததாகவோ, அரசை எதிர்த்து கிளர்ச்சியை தூண்டியதாகவோ கைது செய்யப்பட்டார்களா?
தேசிய பாதுகாப்பு சட்டம்
வீட்டுக் காவல் என்பது அந்த மாநில அரசின் விருந்தினர்கள் என்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மும்பை தாக்குதல் குற்றவாளி கசாபுக்கு பிரியாணி வழங்குவதாக பா.ஜனதா அப்போது கூறியது. அதுபோல் எதுவும் நடைபெறவில்லை.
கிலானியையும், மசரத் ஆலந்தையும் ஏன் சிறைக்கு அனுப்பவில்லை? அவர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஏன் கைது செய்யப்படவில்லை? பா.ஜனதா இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும்.
இவ்வாறு திக்விஜய்சிங் கூறினார்.
அனுமதி இல்லை
ஆனால் பாரதீய ஜனதா, ‘‘இந்த நடவடிக்கையின் மூலம் இந்தியாவுக்கு விரோதமான நடவடிக்கைகளுக்கு காஷ்மீரில் இடமில்லை என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறோம்’’ என்று கூறியுள்ளது.
பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் சம்பிட் பத்ரா கூறும்போது, ‘‘ஆலம் பாகிஸ்தான் கொடியை உயர்த்தியதும், பாகிஸ்தான் ஆதரவு முழக்கங்களை எழுப்பியதும் மத்திய உள்துறை மந்திரியே காஷ்மீர் முதல்-மந்திரிக்கு போன் செய்து, அவர்களை விரைவாக கைது செய்து, கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்’’ என்றார்.
அக்கட்சியின் மற்றொரு செய்தித்தொடர்பாளர் நலின் கோலி கூறும்போது, ‘‘ஆலம் கைது உடனடியாக நடந்துள்ளது. பா.ஜனதாவும், மாநில அரசும் இந்தியாவுக்கு விரோதமான எந்த நடவடிக்கைகளுக்கும் அனுமதி இல்லை என்பதை இதன்மூலம் தெளிவுபடுத்தியுள்ளது’’ என்றார்.
ஆலமை கைது செய்ய தாமதம் ஏன்? என்று பா.ஜனதா பொதுச் செயலாளர் ராம் மாதவிடம் கேட்டபோது, ‘‘மாநில அரசிடம் கேட்க வேண்டிய கேள்வி. ஆனால் போலீஸ் இருமுறை விசாரணை நடத்திய பின்னர் இப்போது உரிய நடவடிக்கை எடுத்திருக்கிறது’’ என்றார்.
துணை முதல்வர் எச்சரிக்கை
மாநில துணை முதல்-மந்திரி நிர்மல்சிங், இதுபோன்ற சம்பவங்கள் (கிளர்ச்சியை தூண்டுதல், பாகிஸ்தான் கொடியை ஏற்றுவது) மீண்டும் தொடர்ந்தால் நாங்கள் இதனை பொறுத்துக் கொள்ள மாட்டோம். இதுபோன்ற நடவடிக்கைகளை இனி அனுமதிக்க மாட்டோம். மாநில அரசு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
பா.ஜனதாவின் அழுத்தம் காரணமாகத்தான்
முப்தி அரசு இந்த நடவடிக்கை எடுத்ததா? என்று கேட்டதற்கு, ‘‘இதில் அழுத்தம் என்ற கேள்வியே எழவில்லை. அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது. மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் இதில் பொறுப்புகள் உள்ளது’’ என்று நிர்மல்சிங் கூறினார்.
0 கருத்துகள்:
Post a Comment