ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. எம்.பி. வேணுகோபால் வலியுறுத்தினார்.
20 தமிழர்கள் கொலை
பாராளுமன்றத்தில் நேற்று அ.தி.மு.க. எம்.பி. டாக்டர் பி.வேணுகோபால் (திருவள்ளூர் தொகுதி) பேசியதாவது:–
கடந்த 7–ந்தேதி தமிழ்நாட்டை சேர்ந்த 20 கூலித் தொழிலாளர்கள் ஆந்திர போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் பழங்குடியினர். செம்மரக்கடத்தல் தடுப்புப் பிரிவு என்ற பெயரில் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த சேஷாச்சலம் வனப்பகுதியில் என்கவுன்டர் நடத்தி தமிழகத்தை சேர்ந்த 20 கூலித் தொழிலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் 100 கடத்தல்காரர்களால் தாங்கள் வன்முறைத் தாக்குதலுக்கு ஆளானதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் எஞ்சிய 80 பேர் எங்கே போனார்கள் என்பது தெரியவில்லை. அவர்கள் அனைவரும் மரங்களை வெட்டிக் கொண்டிருந்ததாகவும் மரக்கட்டைகளை சுமந்து சென்றதாகவும் கூறப்பட்டது. ஆனால் அங்கு பழைய கட்டைகள் போடப்பட்டிருந்தன. அவை திட்டமிட்டு அந்த உடல்களின் அருகில் வைக்கப்பட்டது போலத்தான் காட்சியளித்தன. மிகவும் ஆச்சரியம் தரும் விஷயம் என்னவென்றால் இந்த சம்பவத்தில் எந்த போலீஸ்காரருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.
தீக்காயங்கள்
7 தொழிலாளர்கள் முகங்களிலும் முதுகிலும் துப்பாக்கியால் சுடப்பட்டிருந்தது. சில உடல்களில் தீக்காயங்களும் அவர்களின் தோல் உரிந்தும் காணப்பட்டது. இதனால் அவர்கள் இந்த சம்பவம் நடந்ததாக சொல்லப்படுவதற்கு பல மணி நேரங்களுக்கு முன்பே கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்பது உறுதியாகிறது. மிகவும் பிரபலமான தடயவியல் நிபுணர்களும் ஆந்திர போலீசாரின் கூற்றின் மீது மிகவும் வலுவான சந்தேகங்களை எழுப்பியுள்ளனர்
தொழிலாளர்கள் மீது நிகழ்த்தப்பட்ட காட்டுத்தனமான தாக்குதல்கள் மற்றும் இரக்கமற்ற கொலைகள் குறித்து சமூக ஊடகங்களிலும் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது. அது இந்த தேசத்தின் மனசாட்சியை உலுக்கியுள்ளது.
மத்திய அரசு தலையிட
இந்த செயலை ஆந்திரா போலீஸ் கமிஷனர் மிகவும் பாராட்டத்தக்க விஷயம் என்று கூறியிருந்தாலும், தேசிய மனித உரிமை ஆணையம் மற்றும் தமிழக அரசு இந்த சம்பவம் குறித்த உண்மை தொடர்பாக தெளிவான அறிக்கை ஒன்றை வெளியிடுமாறு வற்புறுத்தியுள்ளன. ஆந்திர உயர்நீதிமன்றமும் இந்த சம்பவம் குறித்த விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
இதுபோன்ற இருமாநில பிரச்சினை சார்ந்த விஷயத்தில் ஆந்திர அரசாங்கம் ஏன் அலட்சியமாக நடந்து கொண்டுள்ளது?
இந்த சம்பவத்தில் தொடர்பு உடையவர்களை கைது செய்யாமல், இந்த கடத்தலுக்கு காரணமானவர்களை ஏன் அந்த அரசு கண்டுகொள்ளவில்லை? உண்மைகளை ஏன் வெளிச்சத்துக்குக் கொண்டுவர முயற்சிக்கவில்லை? இந்த துயர சம்பவம் பல கேள்விகளை எழுப்பியுள்ளதால் மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட்டு துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
0 கருத்துகள்:
Post a Comment