தேர்தலுக்காகதில்லியில் மத்திய அமைச்சர் உமா பாரதியை அவரது இல்லத்தில் புதன்கிழமை சந்தித்துப் பேசும் பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்.
"தமிழகத்தில் எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் வைத்து, தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோரைச் சந்தித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் நாடகமாடியுள்ளார்' என்று தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினரும், பாமக இளைஞரணித் தலைவருமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
தில்லியில் மத்திய நீர் வளத் துறை அமைச்சர் உமா பாரதியை புதன்கிழமை இரவு அவரது இல்லத்தில் அன்புமணி சந்தித்துப் பேசினார். அப்போது, காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு பகுதியில் கர்நாடகம் தடுப்பணைகள் கட்ட முயற்சிப்பதைத் தடுக்க வலியுறுத்தி
அவர் கோரிக்கை மனுவை அளித்தார். இச்சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்றது. இதன் முடிவில் செய்தியாளர்களிடம் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:
காவிரி நடுவர்மன்றத் தீர்ப்பை மதிக்காமல், மேக்கேதாட்டு பகுதியில் தடுப்பணை கட்ட கர்நாடகம் செய்து வரும் முயற்சியைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுங்கள் என உமா பாரதியிடம் கேட்டுக் கொண்டேன்.
இந்த விவகாரத்தில் இனியும் தாமதம்
செய்யாமல் மூத்த வழக்குரைஞரை வைத்து உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு நிலுவையில் உள்ள தமிழக அரசின் வழக்குகளில் தீர்வு கிடைக்க மாநில முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தமிழ்நாட்டின் உயிர்நாடி பிரச்னை. இதில் அரசியல் பார்க்காமல் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு கூட்டி விவாதிக்க வேண்டும். அனைவரும் சேர்ந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
விஜயகாந்த் மீது சாடல்: ஆனால், தமிழக எதிர்க்கட்சித் தலைவராக மாநிலத்தில் தனது கடமையைச் சரிவர ஆற்றாத விஜயகாந்த், எதிர்வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் வைத்து சில அரசியல் கட்சிகளின் தலைவர்களை தில்லிக்கு அழைத்துக் கொண்டு பிரதமர், மத்திய அமைச்சர் ஆகியோரைச் சந்தித்து விட்டுச் சென்றுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட வேண்டிய விஜயகாந்த், அப்பொறுப்பின் மூலம் இதுவரை தமிழ்நாட்டுக்கு உருப்படியாக எதையும் செய்யவில்லை. தமிழக மக்களைப் பற்றி அவருக்கு உண்மையில் அக்கறையும் கிடையாது.
சட்டப்பேரவைக்கு செல்வதும் இல்லை; பேசுவதும் இல்லை. மகனின் திரைப்பட படப்பிடிப்புக்காக வெளிநாடு செல்கிறேன் என்றும் இரண்டு மாதமாக நாளிதழ்களைப் படிக்கவில்லை என்றும் கூறும் அவர் கேள்வி கேட்கும் செய்தியாளர்களை மிரட்டுவதுமாக உள்ளார்.
பிரதமருடனான சந்திப்பு தொடர்பாக விஜய்காந்த் தரப்பில் இருந்து எனக்கு நேரடியாக எந்த அழைப்பும் முறைப்படி வரவில்லை. விஜயகாந்த்தை நம்பி அவரது பின்னால் போகும் அளவுக்கு திமுகவின் நிலைமை இவ்வளவு மோசமாக தரம் தாழ்ந்து விட்டதே என எண்ணும் போது வருத்தமாக உள்ளது என்றார் அன்புமணி ராமதாஸ்.
பரிசீலிக்கப்படும்: உமா பாரதி
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான நடவடிக்கை பரிசீலிக்கப்பட்டு வருகிறது. காவிரி நடுவர்மன்றத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் நடவடிக்கை தொடர்ந்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இந்த விஷயத்தில் தமிழகம், கர்நாடகம் ஆகிய இரு மாநில அரசுகளும் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளன.
நதிகள் இணைப்பு நடவடிக்கையில் சில மாநிலங்கள் மட்டுமே ஆர்வம் காட்டுகின்றன. அந்த வகையில், முதல் கட்டமாக ஆர்வமுள்ள மாநிலங்களில் அத்திட்டத்தைச் செயல்படுத்தும் வாய்ப்புகளைத் தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம்' என்றார் உமா பாரதி.
0 கருத்துகள்:
Post a Comment