தெலுங்கானாவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 2 பேர் உயிரிழந்தனர்.
சரமாரியாக துப்பாக்கிச்சூடு
தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்துக்கு உட்பட்ட சூர்யபேட் ஹைடெக் பஸ் நிலைய பகுதியில் போலீசாரும், ஊர்க்காவல் படையினரும் நேற்று அதிகாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த பஸ் ஒன்றில் இருந்த 2 பயணிகள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
எனவே அவர்களை கீழே இறக்கி விசாரிக்க தொடங்கினர். உடனே அந்த 2 பேரும், தாங்கள் மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியால் போலீசார் மீது சரமாரியாக சுட்டுவிட்டு தப்பி ஓடினர்.
இதில் ஒரு போலீஸ்காரரும், ஒரு ஊர்க்காவல் படை வீரரும் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
வட மாநிலத்தவர்களா?
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், போலீஸ் உயர் அதிகாரிகளும், ஏராளமான போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணையை தொடங்கியதுடன், காயமடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
வட மாநிலங்களில் வன்முறை சம்பவங்களின் போது இதுபோன்ற துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெறுவது உண்டு. எனவே இந்த நபர்கள் இருவரும் பீகார் அல்லது உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவர்களை பிடிக்க மாநிலம் முழுவதும் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
0 கருத்துகள்:
Post a Comment