10வருடசிறைத்தண்டனை! பெண்ணொருவரை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய வழக்கொன்றில் சந்தேகநபர்கள் இருவருக்கெதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதையடுத்து, அவர்களுக்கு தலா 10 வருட கடூழியச் சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபா அபராதம் மற்றும் 25 ஆயிரம் ரூபா நஷ்ட ஈடும் விதித்து மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மட்டக்களப்பு, ஏறாவூரைச் சேர்ந்த மீரா சாரிபு மொகமட் றபீக், அதே இடத்தைச் சேர்ந்த நைனை முகமது பரீட் ஆகிய இருவருக்கும் எதிராக கற்பழிப்பு, கொள்ளை மற்றும் உடைமைகளுக்கு சேதம் விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் தொடரப்பட்ட வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது
கடந்த 2003ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4ஆம் திகதி வேலை வாய்ப்புக்காக குவைத் சென்று திரும்பிய பெண்ணொருவர் வீட்டில் முகமூடி அணிந்து துப்பாக்கி முனையில் பயமுறுத்தி உள்ளே புகுந்த மேற்குறிப்பிட்ட நபர்கள் இருவரும், அப்பெண்ணை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகவும், 23500 ரூபா பெறுமதியான நகைகளையும் கொள்ளையிட்டதாகவும் 45 ஆயிரம் ரூபா பெறுமதியான உடைமைகளை சேதப்படுத்தியதாகவும் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கு விசாரணை மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி கனகா சிவபாத சுந்தரம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, 1ஆம் 2ஆம் எதிரிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நியாயமான சந்தேகத்துக்கு அப்பால் அரச தரப்பினர் நிரூபித்துள்ளதால் இருவருக்கும் தலா 10 வருட கடூழிய சிறைத்தண்டனையும் 10 ஆயிரம் ரூபா அபராதமும் 25 ஆயிரம் ரூபா நட்ட ஈடும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் ஆறு மாதச் சிறைத் தண்டனையும், நஷ்ட ஈடு செலுத்தத் தவறினால் அதற்கு ஒரு வருடச் சிறைத்தண்டனையும் ஒரே காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் அவரது தீர்ப்பில் கூறப்பட்டது.
இந்த வழக்கில் 1ஆம் எதிரியான மீரா சாரிபு மொஹமட் றபீக் என்பவர் நீதிமன்றத்துக்கு ஆஜராகாத நிலையில் இவ்வழக்கு நடத்தப்பட்டது. எனவே இவருக்கு எதிராக பகிரங்க பிடியாணையும் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது
0 கருத்துகள்:
Post a Comment