அரசியல்யாப்புக்குமுரணாக இராணுவத்தினரும்,கடற்படையினரும் தமிழ்ப் பெண் அரசியல் கைதிகளை மிகக் கேவலமானமுறையில்முழு நிர்வாணமாக்கிச் சோதனை என்ற பெயரில் பாலியல்ரீதியானகொடுமைகளைச் செய்ததாகவெலிக்கடைச் சிறைச்சாலையின் பெண் அரசியல் கைதிகள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் கடிதம் மூலம் முறையிடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முறையற்ற சோதனை நடவடிக்கைகளை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரி அனுப்பப்படவுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :
சிறைத்துறைச் சட்டத்தின்படியும், விதிமுறைகளுக்கமைவாகவும் சிறைக்கைதிகளைச் சிறை அதிகாரிகள் தவிர வேறு பிரிவினர் சோதனை செய்வது முறையற்ற செயல். ஆனால் நீதிக்குப் புறம்பான வகையில் இவற்றை எல்லாம் மீறி கொழும்பு நகரில் அமைந்துள்ள மூன்று பிரதான சிறைகளிலும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வெலிக்கடை, கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை, புதிய சிறைச்சாலைகளில் இராணுவத்தினர், கடற்படையினர் சட்டத்துக்கு முரணான வகையில் சோதனைகளை மேற்கொள்கின்றனர். மிகவும் கேவலமான முறையில் முழு நிர்வாணமாக்கி, பத்து, பதினைந்து தடவைகள் இருத்தி எழுப்பி, கேலிச் சிரிப்புகளுக்கு நடுவில் சோதனை என்ற பெயரில் பாலியல் ரீதியான சித்திரவதைகள் இடம்பெறுகின்றன.
வெலிக்கடைப் பெண்கள் பகுதியில் உள்ள பெண் அரசியல் கைதிகளை மிகவும் மிலேச்சத்தனமான முறையிலும் கீழ்த்தரமான வகையிலும் பெண் அதிகாரிகள் சோதனை செய்கின்றனர். இதன்போது இழிவான சொற்பிரயோகங்களையும் மேற்கொண்டு எம்மை வதைக்கின்றனர்.
இவையனைத்தும் சிறை அதிகாரிகளின் பூரண பாதுகாப்புடன் விலங்கிடப்பட்டு நீதிமன்ற தவணைகளுக்கும், வைத்திய பரிசோதனைகளுக்காகவும் சென்றுவரும் போதே நடைபெறுகின்றன. அவர்களுள்ளேயான நம்பிக்கையீனமான நிலையில் நாம் பாதிக்கப்படுவது சரியானதா? இந்த நிலையைச் சுட்டிக்காட்டிய இரண்டு கைதிகள் அண்மையில் தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்.
பெண்களாகிய நாம் எத்தனை துன்பங்களுக்கு முகம் கொடுத்து வெளியில் சொல்ல முடியாமல் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். இந்த விடயங்கள் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கையும் தாக்கல் செய்ய எண்ணியுள்ளோம். ஏனைய சிறைச்சாலைகளில் இடம்பெறும் நடவடிக்கைகளைப் போல் இந்த சிறைச்சாலைகளிலும் சோதனை நடவடிக்கைகள் இடம்பெற உறுதிசெய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
0 கருத்துகள்:
Post a Comment