டென்மார்க் ஓபன் பாட்மின்டன் தொடரில் இந்திய நட்சத்திர வீராங்கனை செய்னா நேவால் சாம்பியன் பட்டம் வென்றார்.
டென்மார்க்கில் உள்ள ஓடென்ஸ் நகரில் டென்மார்க் ஓபன் சூப்பர் சீரிஸ் பிரிமியர் பாட்மின்டன் தொடர் நடந்தது. நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் செய்னா, ஜெர்மனியின் ஜூலியானா செங்கை எதிர் கொண்டார்.
முதல் செட்டில் அசத்திய செய்னா 21-17 என கைப்பற்றினார். பின் இரண்டாவது செட்டிலும் அபாரமாக ஆடிய செய்னா 21-8 என வென்றார். இறுதியில், செய்னா 21-17, 21-8 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, இத்தொடரில் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.
சமீபத்தில் முடிந்த லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இவர், நீண்ட ஓய்வுக்கு பின் பங்கேற்ற முதல் தொடரில் பட்டம் வென்று அசத்தினார்.
இது, செய்னாவின் 11வது சாம்பியன் பட்டம். தவிர இவர், இந்த ஆண்டு வென்ற 4வது பட்டம். முன்னதாக இந்த ஆண்டு நடந்த இந்தோனேஷிய ஓபன், சுவிஸ் ஓபன், தாய்லாந்து ஓபன் தொடர்களில் பட்டம் வென்றார்.
இதுகுறித்து செய்னா கூறியது: டென்மார்க் ஓபன் தொடரில் முதன்முறையாக பட்டம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக டென்மார்க் மற்றும் இந்திய ரசிகர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற பின், என் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
நீண்ட ஓய்வுக்கு பின் விளையாடியதால், புத்துணர்ச்சிடன் களமிறங்கினேன். எனது வலது முழங்காலில் லேசான பாதிப்பு இருந்த போதிலும், முழுத்திறமையை வெளிப்படுத்தி சாதிக்க முடிந்தது. இதற்காக கடவுளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு செய்னா கூறினார்.
0 கருத்துகள்:
Post a Comment