Search This Blog n

04 October 2012

பயிற்சிக்காக இந்தியா வர இருக்கின்றோம் முடிந்தால்

         
 
Friday05October2012.By.Rajah,தமிழகஅரசியல்வாதிகள்தடுத்து நிறுத்திக்கொள்ளட்டும்!ராமதாஸ் கண்டனம் இலங்கை சிறப்புப் படையணியைச் சேர்ந்த 45 உயரதிகாரிகள் வரும் டிசம்பர் மாதம் பயிற்சிக்காக இந்தியா வர இருப்பதாகவும் முடிந்தால் அவர்களை தமிழக அரசியல்வாதிகள் தடுத்து நிறுத்திக்கொள்ளட்டும் என்று இராணுவத்தளபதி ஜெகத் ஜெயசூரிய தெரிவித்த கருத்துக்கு பா.ம.க நிறுவுனர் ராமதாஸ் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலங்கை ஜனாதிபதியின் சகோதரரும் அமைச்சருமான பசில் ராஜபக்ச நேற்று கொழும்பில் இந்திய பத்திரிகையாளர்களிடம் பேசும் போது, இலங்கை இராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் தான் பயிற்சி அளிக்கப்படும் என்றும், இதை எவராலும் தடுக்க முடியாது என்றும் கூறியிருந்தார்.
இதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகுவதற்கு முன்பாகவே இலங்கையின் அநுராதபுரத்தில் நடைபெற்ற இராணுவத்தின் 63ஆவது ஆண்டு விழாவில் பேசிய அந்நாட்டு இராணுவத் தளபதி ஜெகத் ஜெயசூரிய, இலங்கை இராணுவ வீரர்கள் சுமார் 800 பேர் இந்தியாவில் தற்போது பயிற்சி பெற்று வருகின்றனர் என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டிருக்கின்றார்.
அது மட்டுமின்றி, இராணுவ ஒத்துழைப்பைப் பொறுத்தவரையில் இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையில் நெருங்கிய புரிந்துணர்வு நிலவுகின்றது. தமிழக அரசியல்வாதிகள் என்னதான் எதிர்ப்புக் குரல் எழுப்பினாலும் இந்த ஒத்துழைப்பைத் தடுக்க முடியாது. தமிழக அரசியல்வாதிகளுக்கு நாங்களே தகவல் தருகிறோம். வரும் டிசம்பர் மாதத்தில் இலங்கை சிறப்புப் படையணியைச் சேர்ந்த 45 உயரதிகாரிகள் இந்தியா வருகின்றனர்.
முடிந்தால் தமிழக தலைவர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்திக் கொள்ளட்டும் என்று திமிருடனும் அகம்பாவத்துடனும் பேசியிருக்கின்றார். இலங்கைப் படைத்தளபதியின் இந்தப் பேச்சு கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.
இலங்கைப் போரின் போது ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் இந்த ஜெயசுரிய. இதற்காகவே அமெரிக்காவிலும் பல ஐரோப்பிய நாடுகளிலும் இவர் நுழைவதற்கு தடைவிதிக்கப்பட்டிருக்கின்றது.
தமிழர்களை இனப்படுகொலை செய்ததற்காக கைது செய்யப்பட்டு, போர்க்குற்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்த வேண்டிய ஒரு கொடூரன், இன்று தமிழக அரசியல்வாதிகளுக்கு சவால் விடுக்குமளவிற்கு பேசத் துணிந்திருப்பதற்கு காரணம், நட்பு நாடு என்ற போர்வையில் இலங்கை அரசுக்கு இந்தியா அளித்து வரும் ஆதரவுதான்.
மத்தியில் ஆட்சி அமைப்பதில் தமிழகம் தொடர்ந்தும் முக்கிய பங்காற்றி வரும் நிலையில், "தமிழகத் தலைவர்கள் சொல்வதை இந்திய அரசு கேட்காது, நாங்கள் சொல்வதைத் தான் கேட்கும்” என்று ஒரு சுண்டைக்காய் நாட்டின் தளபதி சொல்வதைக் கேட்கும் போது, இந்தியா ராஜபக்சவின் காலணி ஆதிக்கத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றதா? என்ற வினா எழுகின்றது.
இலங்கைப் படைத்தளபதியின் இந்தப் பேச்சு தமிழகத் தலைவர்களுக்கு மட்டுமின்றி இந்திய இறையாண்மைக்கும் விடப்பட்ட சவாலாகும்.
இலங்கைப் பிரச்சினையில் தமிழகத்தின் குரலை மத்திய அரசு தொடர்ந்தும் புறக்கணித்து வருகிறது. தமிழ் மக்களின் உணர்வுகளையும் மதிப்பதில்லை. பிரதமரை விமர்சித்து அமெரிக்காவின் டைம் இதழ் கட்டுரை எழுதியதற்காக கண்டனம் தெரிவித்த மத்திய அரசு, இலங்கை நாளிதழ் ஒன்றில் நமது பிரதமரையும் தமிழக முதல்வரையும் மிகவும் வக்கிரமான முறையில் சித்தரித்து, கேலிச் சித்திரம் வெளியிடப்பட்ட போது, இதைக் கண்டு கொள்ள வில்லை. இந்திய அரசின் இந்த இலங்கை சார்புப் போக்கு தான் தமிழகத் தலைவர்களை எப்படி வேண்டுமானாலும் பேசலாம். அதைக் கண்டு கொள்ளாது என்று நினைக்கும் அளவுக்கு இலங்கை ஆட்சியாளர்களுக்கும் இராணுவத் தளபதிகளுக்கும் தைரியத்தைத் தந்துள்ளது.
இந்தப் போக்கு மிகவும் ஆபத்தானது. இதை அனுமதிக்கக் கூடாது. தமிழ்நாடு இந்தியாவின் ஒரு பகுதி எனக் கருதினால் இலங்கை அமைச்சர்கள் மற்றும் இராணுவத் தளபதியின் பேச்சுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும். அதுமட்டுமின்றி இந்தியாவில் பயிற்சி பெற்று வருவதாகக் கூறப்படும் சிங்கள வீரர்கள் 800 பேரையும் இலங்கைக்குத் திருப்பி அனுப்ப வேண்டும் என வலியுறுத்துகிறேன்

0 கருத்துகள்:

Post a Comment