மலையாள சினிமா ஜோடி திலீப்– மஞ்சு வாரியருக்கு கோர்ட்டு நேற்று விவாகரத்து வழங்கி தீர்ப்புக் கூறியது.
நடிகர் திலீப் – நடிகை மஞ்சுவாரியர்
மலையாள சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கி வரும் திலீப், பல ஆண்டுகளாக தன்னுடன் திரைப்படத்தில் ஜோடியாக நடித்து வந்த நடிகை மஞ்சு வாரியரை காதலித்தார். அவர்கள் முதன் முறையாக “சல்லாபம்’’ என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்தபோது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.
3 ஆண்டுகாலம் காதலர்களாக இருந்த அவர்கள் கடந்த 1998–வது ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு மஞ்சு வாரியர் பல்வேறு வாய்ப்புகள் கிடைத்தும் திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். இந்த ஜோடிக்கு மீனாட்சி (வயது 15) என்ற மகள் உள்ளார்.
கருத்து வேறுபாடு
16 ஆண்டு கால திருமண வாழ்க்கைக்கு பிறகு இவர்கள் இடையே திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டது. நடிகை காவ்யா மாதவனுடன் திலீப்புக்கு ஏற்பட்ட நெருக்கம்தான் இதற்கு காரணம் என கூறப்பட்டது.
அதைத் தொடர்ந்து நடிகை மஞ்சுவாரியர், திலீப்பின் ஆலுவாவில் உள்ள வீட்டில் இருந்து வெளியேறி
திருச்சூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். மேலும் சினிமா படங்களில் மஞ்சு வாரியர் நடிக்கத் தொடங்கினார். கடந்த ஆண்டு இவர் நடித்த “ஹவ் ஓல்டு ஆர் யூ’’ என்ற திரைப்படம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தின் தமிழ் மறுபதிப்பில் நடிகை ஜோதிகா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகர் திலீப்பும் நடிகை மஞ்சு வாரியரும் இணைந்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்து இருந்தனர்.
கோர்ட்டு தீர்ப்பு
இந்த வழக்கில் எர்ணாகுளம் குடும்பநல கோர்ட்டு இருவருக்கும் விவாகரத்து வழங்கி நேற்று தீர்ப்பளித்தது. இவர்களது மகள் மீனாட்சி, திலீப்புடன் தொடர்ந்து வசித்து வருவதற்கும், அவரை எப்போதும் மஞ்சு வாரியர் சந்திக்கவும் கோர்ட்டு அனுமதி அளித்தது.
தீர்ப்புக்கு பிறகு நடிகர் திலீப் கூறுகையில் எங்களுக்கு விவாகரத்து கிடைத்தாலும், நாங்கள் இருவரும் இனிமேல் நல்ல நண்பர்களாக இருப்போம் என்றார்.
0 கருத்துகள்:
Post a Comment