குண்டூர்: மகாத்மா காந்தியின் சிலை திறப்பு விழா அழைப்பிதழில், தமிழக கவர்னர் ரோசய்யாவின் ஆளுயர படத்திற்கு கீழ், தேசத் தந்தை மகாத்மா காந்தி, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவின் சிறிய படங்கள் இடம் பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதனால், விழாவில் கலந்து கொள்வதை புறக்கணித்தார் ரோசய்யா.
ஆதரவாளர்:
ஆந்திர மாநிலம், குண்டூரைச் சேர்ந்த வியாபாரி கண்டசாலா பங்காரு பாபு. தற்போதைய தமிழக கவர்னர் ரோசய்யா, ஆந்திர மாநில அரசியலில் தீவிரமாக இருந்த போது, அவரின் ஆதரவாளராக இருந்த பாபு, சமீபத்தில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம்
கட்சியில் இணைந்தார். சிலகல்லூரிபேட்டை யில் உள்ள மார்க்கெட்டில், காந்தி சிலையை நிறுவ விரும்பிய பாபு, அதற்காக மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரினார். அனுமதி கிடைத்ததால், தமிழக கவர்னர் ரோசய்யாவை, சிலை திறப்பு விழாவில் பங்கேற்று, காந்தி சிலையை திறந்து வைக்கும்படி வேண்டினார். ரோசய்யாவும் சம்மதம் தெரிவித்தார்.
இந்நிலையில், ரோசய்யா மீதான அதீத அன்பை வெளிப்படுத்தும் வகையில், சிலை திறப்பு விழா அழைப்பிதழில், ரோசய்யாவின் ஆளுயர படத்தை அச்சிட்டு, அதன் கீழ் பகுதியில் சிறிய அளவில் காந்தி, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவின் படங்களையும்
இடம் பெறச் செய்தார் பாபு. அழைப்பிதழில், ரோசய்யாவின் காலடியில் தேசத் தந்தை காந்தி, நாட்டின் பிரதமர் ஆகியோரின் படங்கள் இடம் பெற்றது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனால், காந்தி சிலை திறப்பு விழாவில் பங்கேற்பதை, கவர்னர் ரோசய்யா தவிர்த்து விட்டார்.
இது தொடர்பாக, தமிழக கவர்னர் மாளிகை வட்டாரங்கள் கூறியதாவது: காந்தி சிலை திறப்பு விழா என்பதால், கவர்னர் ரோசய்யா சம்மதம் தெரிவித்தார்.
சம்பந்தம் இல்லை:
ஆனால், அழைப்பிதழில் தலைவர்களின் படங்கள், தன் காலின் கீழ், இடம் பெற்ற விவரம் தெரிந்ததும், விழாவை ரோசய்யா புறக்கணித்துவிட்டார். அவருக்கும், அழைப்பிதழ் விவகாரத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இவ்வாறு, கவர்னர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.
மத்திய அரசு அதிரடியில் தப்பிய கவர்னர் இவர்:
ஆந்திர மாநில நிதி அமைச்சர், முதல்வர் என, பல முக்கிய பொறுப்பு வகித்த ரோசய்யா, 2011ல், காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால், தமிழக கவர்னராக நியமிக்கப்பட்டார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ., அரசு, மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்ற பின், காங்., அரசால்
நியமிக்கப்பட்ட பல மாநில கவர்னர்கள் நீக்கப்பட்டு, புதிய கவர்னர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனாலும், ரோசய்யாவுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. அவர், தமிழக கவர்னராக தொடர்கிறார். இன்னும் ஓராண்டுக்கு அவரின் பதவிக்காலம் உள்ளது. அதனால்,
சர்ச்சைக்குரிய அழைப்பிதழால், மத்திய அரசின் கோபத்திற்கு ஆளாகக் கூடாது என்பதற்காகவே, காந்தி சிலை திறப்பு விழாவை ரோசய்யா புறக்கணித்து விட்டார் என, தெரிகிறது.
0 கருத்துகள்:
Post a Comment