இந்தியாவில் மத சகிப்பின்மையால் நடந்த காரியங்களை காந்தி கண்டிருந்தால் அதிர்ச்சி அடைந்து இருப்பார் என்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா பேசி இருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியில் சர்ச்சை பேச்சு
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, தனது இந்திய பயணத்தின்போது, கடந்த மாதம் 27-ந் தேதி டெல்லியில் ஸ்ரீகோட்டை கலையரங்கில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அப்போது அவர், “மதத்தின் வழியில் பிளவுபடாத வரையிலும் இந்தியாவின் வெற்றி தொடர்ந்து கொண்டிருக்கும். மதப்பற்றின் அடிப்படையிலோ, இன்ன பிற வழிகளிலோ நம்மை பிளவுபடுத்தும் எந்த முயற்சியையும் நாம் எதிர்த்து நிற்க வேண்டும்” என குறிப்பிட்டார்.
மத்தியில் ஆளுகிற நரேந்திர மோடி அரசைத்தான் ஒபாமா, இப்படி சூசகமாக குறிப்பிட்டார் என்று சர்ச்சை எழுந்தது.
அமெரிக்கா விளக்கம்
ஆனால் இதை அமெரிக்கா திட்டவட்டமாக மறுத்தது. இதுபற்றி வாஷிங்டன் வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரிகளில் ஒருவரான பில் ரெயினர் ஒரு அறிக்கை வெளியிட்டார்.
அந்த அறிக்கையில் அவர், “மத சகிப்பின்மை பற்றிய ஜனாதிபதி ஒபாமாவின் கருத்துகள் ஊடகங்களில் திரிக்கப்பட்டு விட்டன. அவரது பேச்சை முழுமையாக பார்த்தால், அமெரிக்காவும், இந்தியாவும் கொண்டுள்ள அடிப்படை ஜனநாயக மதிப்பீடுகள், கோட்பாடுகள் நமது அனைத்து மக்களுக்கும் தொடர்ந்து வழங்கத்தக்கதாக அமைந்திருப்பதை எடுத்துக்காட்டியது” என குறிப்பிட்டார்.
‘இணையதளத்தை பாருங்கள்’
மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் சையத் அக்பருதீனிடம் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) டெல்லியில் நிருபர்கள், “மத சகிப்பின்மை பற்றிய ஒபாமாவின் பேச்சை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?“ என கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், “வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் இயக்குனர் ஒரு விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர், (மத சகிப்பின்மை பற்றி) நீங்கள் தவறாக புரிந்துகொண்டிருக்கிறீர்கள் என்று கூறி இருக்கிறார். அதுவே எப்போதும் நமது கருத்தாகவும் உள்ளது. இதில் வெள்ளை மாளிகை கூறுகிற விளக்கத்தின் மீது உங்களது கவனத்தை செலுத்த வேண்டும் என விரும்புகிறேன். அது இப்போது அவர்களின் இணையதளத்தில் உள்ளது. நீங்கள் அதைப் பார்க்க வேண்டும். அவர்களின் கருத்து என்ன என்று பார்க்க வேண்டும். நீங்கள் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறீர்களோ, அது அவர்களின் கருத்தாக இல்லை” என கூறினார்.
மீண்டும் சர்ச்சை
இந்த நிலையில், அமெரிக்காவில் வாஷிங்டனினில் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) நடந்த தேசிய பிரார்த்தனை காலை உணவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒபாமா பேசிய பேச்சும் புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த பேச்சின்போது அவர் கூறியதாவது:-
வியக்கத்தக்கதும், அழகானதும், முழுமையாய் அற்புதமான பன்முகத்தன்மை கொண்டதுமான இந்தியாவில் இருந்து நானும், மிச்செல்லும் திரும்பி இருக்கிறோம்.
ஆனால் அங்கே கடந்த காலங்களில் பல வகையான மத நம்பிக்கை கொண்ட மக்களும், அவ்வப்போது, பிற மத நம்பிக்கை கொண்ட மக்களால் குறிவைத்து தாக்கப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் அவர்களது பாரம்பரியமும், அவர்களது நம்பிக்கையும்தான்.
மத சகிப்பின்மையால் நடந்த காரியங்கள், அந்த நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட காந்திஜியை அதிர்ச்சி அடைய வைத்திருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
0 கருத்துகள்:
Post a Comment