Search This Blog n

06 February 2015

பஞ்சாயத்து தலைவர் தேர்வை எதிர்த்து வழக்கு-??=

குற்றப்பின்னணியை மறைத்தால் வேட்பாளரின் வெற்றி செல்லாது சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு
வேட்பாளர்கள் தங்கள் மீதான குற்ற வழக்குகளை மறைத்தால் அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தாலும் அந்தத் தேர்தல் முடிவு செல்லாததாக அறிவிக்கப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு நேற்று வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.
வழக்கு
கடந்த 13.10.2006 அன்று கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுகா தேக்கம்பட்டி பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் போட்டியிட்ட கிருஷ்ணமூர்த்தி என்பவர் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சிவகுமார் என்பவர் கோயமுத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் கிருஷ்ணமூர்த்தியை எதிர்த்து
 வழக்கு தொடுத்தார்.
அவர் தனது மனுவில், ‘கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த வேட்பு மனுவில் தன் மீது நிலுவையில் இருந்த குற்ற வழக்குகள் குறித்த தகவல்களை மறைத்து விட்டார். அந்த தகவல்களை அவர் தெரிவித்து
 இருந்தால் அவரது வேட்பு மனு ரத்து செய்யப்பட்டிருக்கும். தன்னைப் பற்றிய குற்றப்பின்னணியை உள்நோக்கத்துடன் மறைத்து பொய்யான தகவல்களை 
அளித்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். எனவே அந்த தேர்தலை ரத்து செய்து மறு தேர்தல் நடத்த வேண்டும்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த மனுவை ஏற்றுக் கொண்ட கோயமுத்தூர் முதன்மை மாவட்ட நீதிமன்றம், கிருஷ்ணமூர்த்தி வெற்றி பெற்ற தேர்தல் செல்லாது என்றும், மறுதேர்தல் அறிவிக்க வேண்டும் என்றும் 2006–ம் ஆண்டில் தீர்ப்பு வழங்கியது.
அப்பீல் தள்ளுபடி
மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கிருஷ்ணமூர்த்தி சென்னை ஐகோர்ட்டில் அப்பீல் செய்தார். அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, அதை தள்ளுபடி செய்தது.
சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை ரத்து செய்யக்கோரி கிருஷ்ணமூர்த்தி சுப்ரீம் கோர்ட்டில் 2009–ம் ஆண்டில் அப்பீல் செய்தார். இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவ மூத்த வழக்கறிஞர்கள் என்.ஹரிஷ் சால்வே மற்றும் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மணிந்தர் சிங் ஆகியோரை சுப்ரீம் கோர்ட்டு நியமித்தது.
தீர்ப்பு விவரம்
இந்த மனுவின் மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் பிரபுல்ல சி.பந்த் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. கிருஷ்ணமூர்த்தியின் 
அப்பீல் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பில் கூறி இருப்பதாவது:–
அரசியல், கிரிமினல் மயமாவது ஏற்க முடியாதது. 
ஒரு வேட்பாளர் வேட்பு மனுவை தாக்கல் செய்யும்போது அவரைப் பற்றிய குற்றப்பின்னணி, குறிப்பாக கடுமையான குற்றங்கள் அல்லது ஊழல் தொடர்பான குற்றங்கள் அல்லது தனிமனித ஒழுக்கம் தொடர்பான குற்ற வழக்குகள் வேட்பு மனுவில் குறிப்பிடுவது கட்டாயமாகும்.
செல்லாது
அந்த தகவல்களை மறைத்து வைப்பது நேர்மையான தேர்தல் நடைமுறைக்கு எதிரானதாகும். அது வாக்காளர்களை ஏமாற்றுவதற்கு ஒப்பாகும். தவறான வழியில் வாக்காளர்களை திசை திருப்புவதற்கு ஒப்பான காரியம். அப்படி மறைத்த வேட்பாளர், அந்தத் தேர்தலில் வெற்றி பெற்றாலும் அந்தத் தேர்தல் செல்லாது என அறிவிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர்.
அப்பீல் மனுதாரர் கிருஷ்ணமூர்த்திக்கு ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment