பிரதமர் மோடி வருகிற மே மாதம் சீனாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.
4 நாள் பயணம்
மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் 4 நாள் பயணமாக நேற்று டெல்லியில் இருந்து சீனாவுக்கு சென்றார். தலைநகர் பீஜிங்கில் அவருக்கு உற்காச வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த பயணத்தின்போது பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார்.
நேற்று மாலை சீன வெளியுறவு மந்திரி வாங் யியை அவர் பீஜிங் நகரில் சந்தித்து பேசினார்.
அவர் சீன அதிபர் ஜின்பிங்கையும் சந்தித்து பேசுகிறார். இதேபோல் இன்று நடைபெறும் ரஷியா, இந்தியா, சீனா நாடுகளின் வெளியுறவு மந்திரிகளின கூட்டத்திலும் அவர் பங்கேற்கிறார்.
முன்னதாக பீஜிங் சென்றடைந்ததும் தனது பயணத்தின் நோக்கம் குறித்து இந்திய செய்தியாளர்களுக்கு சுஷ்மா சுவராஜ் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:–
மோடி சீனா செல்கிறார்
பிரதமர் மோடி வருகிற மே மாதம் சீனாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். அவர் சீனாவில் சுற்றுப் பயணம் செய்யும் தேதிகளை சீன அரசுக்கு தெரிவிப்பேன். எனது இந்த பயணம் பிரதமர் மோடியின் சீன பயணத்துக்கான முன்னேற்பாடு ஆகும்.
இந்திய–சீன நாடுகளின் உறவை மேம்படுத்துவதற்கு 6 அம்ச திட்டம் அடங்கிய பரிந்துரையை அளிப்பதுதான் எனது சீன சுற்றுப் பயணத்தின் நோக்கம்.
6 முக்கிய அம்சங்கள்
இரு நாடுகளும் வெளிப்படையான பேச்சு வார்த்தைகளை மேற்கொள்வது, பல்வேறு துறைகளில் விரிவான ஒப்பந்தங்களை செய்து கொள்ளுதல், பிராந்திய மற்றும் உலகளாவிய வி
ஷயங்களில் ஆர்வத்துடன் செயல்படுதல், புதிய பகுதிகளில் ஒத்துழைத்து செயல்படுவது, பாதுகாப்பு மற்றும் தகவல் தொடர்புகளை விரிவு படுத்துதல், ஆசிய நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுதல் ஆகியவை அந்த 6 அம்சங்கள் ஆகும்.
மேலும், இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம் மற்றும் சரக்குகள் கையாளுதல் அதிக அளவில் இருப்பதால் இரு நாடுகளும் தொழில்துறையில் அதிக முதலீடுகள் செய்வது, போக்குவரத்து தொடர்பை இணைத்தல், தொழில் பூங்காக்களை நிறுவுதல் போன்றவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
புதிய வழித்தடம்
இமயமலையில் உள்ள கைலாஷ் மானசரோவருக்கு யாத்திரை செல்லும் இந்திய யாத்ரீகர்கள் பேருந்து மூலம் நேரடியாக பயணம் செல்லும் வகையில் கூடுதலாக தயாராகி வரும் புதிய வழித்தடத்தை மோடியின் மே மாத சீன பயணத்துக்குள் தொடங்குவதற்கு ஏற்பாடு செய்வது குறித்தும் பேசப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஒபாமா வருகை
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சீன அதிபர் ஜின்பிங் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அதன் பரஸ்பர நடவடிக்கையாக பிரதமர் மோடி மே மாதம் சீனாவில் சுற்றுப்பயணம் செய்வார்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மையில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது அவருடைய பயணத்துக்கு இந்திய அரசு மிகவும் முக்கியத்துவம் அளித்தது. மேலும், ஆசிய பசிபிக் பகுதியில் சீனா ஆதிக்கம் செலுத்துவதை ஒபாமா மறைமுகமாக கண்டித்து பேசினார். இதனால் சீனா அதிருப்திக்கு உள்ளானது.
இதைத்தொடர்ந்து இந்தியா–சீனா இடையே ஏற்பட்டுள்ள கசப்புணர்வை முடிவுக்கு கொண்டு வரவும், இரு நாடுகளுக்கும் இடையே புதிய நட்பை மலரச் செய்யவும் மோடியின் சீனப் பயணம் உதவும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
0 கருத்துகள்:
Post a Comment