வங்கதேச கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வங்காள தேசத்தில் 2007–ம் ஆண்டு, மசூதியில் தொழுகை நடத்திவிட்டு திரும்பிக்கொண்டிருந்த அரசு வக்கீல் ஹைதர் உசேன் கொலை செய்யப்பட்டார்.
இவர், ஒரு கொலை வழக்கில் அரசு தரப்பில் ஆஜராகி, தடை செய்யப்பட்ட ஜமாத் உல் முஜாஹிதீன் (ஜே.எம்.பி.) தீவிரவாத இயக்கத்தின் தலைவர் ஷேக் அப்துர் ரகுமான் உள்ளிட்ட 6 பேருக்கு மரண தண்டனை பெற்றுத்தந்தார். அவர்கள் தூக்கில் போடப்பட்டனர். இதற்கு பழிவாங்கும் விதமாக அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில், ஜமாத் உல் முஜாஹிதீன் (ஜே.எம்.பி.) தீவிரவாத இயக்கத்தின் 5 உறுப்பினர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதில் 2 பேர் தலைமறைவு குற்றவாளிகள்.
இந்த வழக்கை தென்மேற்கு ஜலகதி மாவட்ட கூடுதல் செசன்சு நீதிபதி அப்துல் ஹலிம் விசாரித்து வந்தார். விசாரணை முடிவில் 5 பேர் மீதான குற்றச்சாட்டுகளும், சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக கண்டறிந்து, அனைவருக்கும் மரண தண்டனை விதித்து நேற்று பரபரப்பு தீர்ப்பு அளித்தார்.
மேற்கு வங்காள மாநிலம் பர்த்வானில் கடந்த ஆண்டு அக்டோபர் 2–ந் தேதி நடந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய இயக்கம்தான், ஜமாத் உல் முஜாஹிதீன் என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
Post a Comment