.முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் என்று மஞ்சி திட்டவட்டமாக தெரிவித்தார்.
பிரதமருடன் சந்திப்பு
டெல்லியில் நேற்று நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் பீகார் முதல்-மந்திரி ஜிதன்ராம் மஞ்சி கலந்து கொண்டார். பின்னர் மாலையில் அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 30 நிமிடங்கள் நீடித்தது. அப்போது இருவரும் பீகார் அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மஞ்சியிடம், பீகார் அரசியலில் ஏற்பட்டு உள்ள நெருக்கடி குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-
பதவி விலக மாட்டேன்
முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகும் எண்ணம் எதுவும் என்னிடம் இல்லை. ஏனென்றால் எனக்கு பெரும்பான்மை பலம் உள்ளது. அதை சட்டசபையில் வருகிற 20-ந் தேதி நிரூபிப்பேன்.
ஒருவேளை சட்டசபையில் என்னால் பலத்தை நிரூபிக்க முடியவில்லை என்றால் மட்டுமே முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகுவேன்.
மந்திரி சபை விரிவு
விரைவில் பீகார் மந்திரிசபை விரிவு செய்யப்படும். முஸ்லிம் ஒருவர் உள்பட 2 பேர் துணை முதல்-மந்திரிகளாக நியமிக்கப்படுவார்கள்.
எனது ஆட்சிக்கு யார் ஆதரவளித்தாலும் அதை ஏற்றுக்கொள்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
கருத்து வேறுபாடு
இதனிடையே மஞ்சி, நிதிஷ்குமார் இருவரில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பதில் ஐக்கிய ஜனதாதளத்தின் கூட்டணி கட்சியான லாலுபிரசாத்தின் ராஷ்டிரீய ஜனதாதளத்தில் கருத்து வேறுபாடு நிலவுகிறது.
இது குறித்து அக்கட்சியின்
மூத்த எம்.எல்.ஏ. ராகவேந்திர பிரதாப் சிங் கூறுகையில், ‘மஞ்சி ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும்படி கட்சி மேலிடத்தை கேட்டுக்கொள்வேன். இது பற்றி நாளை நடக்கவிருக்கும் கட்சி கூட்டத்தில் எனது கருத்தை எடுத்து வைப்பேன்’ என்றார்.
பிளவுபடுகிறது
இவரைப்போலவே ராஷ்டிரீய ஜனதாதளத்தின் இன்னொரு எம்.எல்.ஏ.வான பிரிஜ் கிஷோர் சிங்கும் மஞ்சிக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறப்படுகிறது.
மேலும் ஐக்கிய ஜனதாதளத்திலும், பிளவு ஏற்பட்டு ஒரு பகுதி எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு செல்வார்கள் என்றும், அவர்கள் மஞ்சியை ஆதரிப்பார்கள் என்ற ஊகமான தகவலும் வெளியாகி உள்ளது.
மந்திரிகள் விலகல் ஏற்பு
இந்த நிலையில், மஞ்சியின் மந்திரி சபையில் பதவி வகித்த 20 மந்திரிகள் மாநில கவர்னரின் செய்தி தொடர்பாளர் எஸ்.கே.பதக்கிடம் நேற்று முன்தினம் அளித்த ராஜினாமா கடிதங்களை கவர்னர் திரிபாதி ஏற்றுக்கொண்டதாக கவர்னர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.
எனினும், தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினையில், முதல்-மந்திரி மஞ்சி ஆலோசனையின் பேரில் கவர்னர் நடவடிக்கை எடுப்பார் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
0 கருத்துகள்:
Post a Comment