27.09.2012.By.Rajah.சொந்த இடத்தில் மீள் குடியமர்வு எனக் கூறி நேற்றுமுன்தினம் நந்திக் கடல் அருகே சூரியபுரம் காட்டுப் பகுதியில் படையினரால் இறக்கிவிடப்பட்ட கேப்பாபிலவைச் சேர்ந்த 110 குடும்பங்களும் தொடர்ந்தும் அங்கு பெருந்துன்பங்களை அனுபவிப்பதுடன் உதவிகள் எதுவுமின்றி அல்லல்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
அடிப்படை வசதிகள் இல்லாமையால் இந்தக் குடும்பங்கள் அந்தரித்த நிலையில் காணப்படுவதாக அங்கிருந்து கிடைத்த செய்திகள் தெரிவித்தன. நேற்றுமுன்தினம் படையினரால் அந்தப் பகுதியில் இறக்கிவிடப்பட்ட இந்தக் குடும்பங்களுக்கு குடிதண்ணீர் மற்றும் உணவு வசதிகள் நேற்று சிறிதளவே வழங்கப்பட்டதாகவும் அங்குள்ள முழு மக்களுக்கும் உதவிகள் கிடைக்கவில்லை எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.
பகலில் கடும் வெப்பமான கால நிலையால் சிறுவர்கள் வெயிலில் வாடி வதங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் மலசல கூடங்கள் எதுவும் இல்லாமையால் பெண்களும் சிறுவர்களும் பெரும் அல்லல் படுகின்றனர்.
இந்த அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எதுவும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என பாதிக்கப்பட்ட குடும்பத் தலைவர் ஒருவர் உதனிடம் தெரிவித்தார். மர நிழல்களிலும் சிறிய கூடாரங்களை அமைத்தும் தாம் தங்கியுள்ளதாகவும் இரவில் பாம்புகளின் தொல்லை தம்மை அச்சத்துக்குள்ளாக்கியிருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.
இன்னும் எவ்வளவு காலத்துக்கு இவ்வாறான ஒரு அபாய நிலையில் குடியிருக்க நேருமோ எனவும் அவர் அச்சம் வெளியிட்டார். போதிய குடிதண்ணீரோ உணவோ இல்லாமல் மக்கள் பரிதாப நிலைக்கு உட்பட்டிருப்பதாகவும் இது குறித்து அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டு தம்மைக் காப்பாற்ற வேண்டும் எனவும் அவர் கோரினார்
0 கருத்துகள்:
Post a Comment