மதுரை பெத்தானியாபுரம் அண்ணா மெயின் வீதிக்கருகில் உள்ள குப்பைத் தொட்டியில் குண்டு வெடித்ததில் மூன்று பேர் படுகாயமடைந்ததுடன், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாநகராட்சி சார்பில் அங்கு அமைக்கப்பட்டுள்ள இரும்பு குப்பைத் தொட்டியில், மாநகராட்சி ஊழியர்கள் தினமும் குப்பைகளை லொறியில் ஏற்றி கொண்டு செல்வது வழக்கம்.
இன்று காலை 9.40 மணி அளவில் அங்கு வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டியில் மர்ம ஆசாமிகள் யாரோ வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு திடீரென்று பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
இவ்வெடிப்புச் சம்பவத்தால் இரும்பு குப்பைத் தொட்டி துண்டு துண்டாக சிதறி பறந்தன. இதில் அந்த வழியாக சென்ற 3 பேர் படுகாயம் அடைந்தள்ளனர்.சம்பவத்தில் படுகாயமடைந்தவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் பொலிஸார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
குப்பைத் தொட்டியில் வெடித்த குண்டு எத்தகைய சக்தி வாய்ந்த குண்டு எனவும் அதனை குப்பைத் தொட்டியில் மறைத்து வைத்தது யார்? எனவும் பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த சில வாரங்களாகவே மதுரை நகர காவல்நிலையத்திற்கு மதுரையில் தொடர்ந்து குண்டுகள் வெடிக்கும் என்று மர்ம தொலைபேசி வந்து கொண்டிருந்தது.
இதனையடுத்து, நகர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் குப்பைத் தொட்டியில் கிடந்த குண்டு வெடித்துள்ளது. இந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
0 கருத்துகள்:
Post a Comment