மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நான்கு பேர் படுகொலை வழக்கில், நான்கு தமிழர்களுக்கு மலேசிய நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2010ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் பிரபலமான பெண் அழகுக் கலை நிபுணரும், தொழிலதிபருமான சோசிலாவதி லாவியா உள்ளிட்ட நான்கு பேர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் பரபரப்பாக பேசப்பட்டது. அக்கொலை வழக்கில் குற்றவாளியாக இனம்காணப்பட்ட நான்கு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கோலாலம்பூருக்கு அருகில் பான்டிங் பகுதியில் வழக்கறிஞர் பத்மநாபனுக்குச் சொந்தமான ஒரு பண்ணை வீடு உள்ளது. அந்த வீட்டுக்கு கடந்த 2010ம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் திகதி சோசிலாவதி நில விவகாரம் தொடர்பாக பேசுவதற்காக தனது வழக்கறிஞர் அகமது கமீல் கரீம், வங்கி அதிகாரியான நூரிஷாம் முகம்மது மற்றும் கார் டிரைவர் ஆகியோருடன் போயிருந்தார்.
ஆனால் நான்கு பேரும் பத்மநாபனின் பண்ணை வீட்டிலிருந்து காணாமல் போய் விட்டனர். இதுகுறித்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், நான்கு பேரின் எலும்புக் கூடுகளும் பத்மநாபனின் பண்ணைக்கு அருகே கண்டுபிடிக்கப்பட்டு, பத்மநாபன் உட்பட நான்கு பேர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
நில விவகாரம் தொடர்பாக நான்கு பேரையும் பத்மநாபன் கும்பல் கொலை செய்தது பின்னர் தெரிய வந்தது.
இதுதொடர்பாக நீதிபதி ததுக் அக்தர் தஹிர் அளித்த தீர்ப்பில்,
குற்றம் சாட்டப்பட்ட வழக்கறிஞர் பத்மநாபன் (43வயது), மற்றும் அவரது பண்ணை வேலையாட்களான தில்லையழகன், மதன், காத்தவராயன் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், கொல்லப்பட்டவர்களின் உடல்கள் கிடைக்கவில்லை என்பதற்காக குற்றவாளிகள் 4 பேரையும் தண்டிக்காமல் இருந்துவிட முடியாது. இந்த கொலையை நிரூபிக்க வலுவான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. எனவே அவர்களுக்கு தூக்குத் தண்டனை அளிப்பதாகவும் அறிவித்தார்
0 கருத்துகள்:
Post a Comment