சென்னை கீழ்ப்பாக்கத்தில் சினிமா பைனான்சியர் விஜயகர் துப்பாக்கிகளுடன் அட்டகாசம் செய்து 10 மணி நேரம் பொதுமக்களையும், பொலிஸாரையும் பெரும் பீதிக்குள்ளாக்கியுள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில், சப்த மாலிகா அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த விஜயகர், கடந்த மூன்று ஆண்டுகளாக வீட்டு உரிமையாளருக்கு வாடகை செலுத்தாமல் இருந்துள்ளார்.
இதனால், கோபமடைந்த வீட்டு உரிமையாளரும், குடியிருப்பு வளாக நல சங்கத்தினரும் விஜயகரை, வீட்டை காலி செய்யுமாறு வற்புறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் காலை 7:30 மணிக்கு குடியிருப்போர் நல சங்க அலுவலகத்தில் துப்பாக்கியுடன் புகுந்த விஜயகர், தன்னால் எந்த பிரச்சினையும் இல்லை என கடிதம் எழுதி தருமாறு மிரட்டியுள்ளார்.
அத்துடன், தன்னிடம் இருந்த துப்பாக்கியால் மேல் நோக்கிசுட்டதுடன், அங்கிருந்த ஊழியரை தாக்கிவிட்டு தன் வீட்டுக்கு ஒரு பெண்ணுடன் சென்று விட்டார்.
இதுகுறித்து, பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு பொலிஸார் குவிந்தனர்.
தன் வீட்டில் இருந்த பெண்ணை, துப்பாக்கியால் சுட்டு விடுவதாக விஜயகர் பொலிஸாரை மிரட்டினார். தனது வீட்டைவிட்டு காரில் பெண்ணுடன் தப்ப முயன்ற விஜயகரை பொதுமக்கள் சரமாரியாக அடித்துப் பிடித்தனர். காலை 11:00 மணிக்கு ஆரம்பமான இந்த மிரட்டல் இரவு 9:00 மணிக்கு முடிவுக்கு வந்தது.
விஜயகரைக் கைது செய்து பொலிஸார் விசாரணை நடத்தியபோது அவர் ஒன்றரை வருடமாக மன நிலை பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. மருத்துவர்களும் அதனை உறுதி செய்தனர்.
இதையடுத்து, எழும்பூர் 13வது நீதவான் சிவசுப்பிரமணியன் முன்னிலையில், அவரை ஆஜர்படுத்தி புழல் சிறைக்கு பொலிஸார் அழைத்து சென்றனர். ஆனால் மன நலம் பாதிக்கப்பட்டவரை சிறையில் அனுமதிக்க முடியாது என சிறைத் துறையினர் மறுத்து விட்டனர்.
இதையடுத்து, நீதவானின் உத்தரவுபடி, கீழ்ப்பாக்கம் மன நல மருத்துவமனையில் விஜயகரை பொலிஸார் சேர்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
0 கருத்துகள்:
Post a Comment