இந்திய பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதால், அதை கண்காணிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது.
அதனால் இந்திய விமானப் படையின் புதிய விமான தளம் தஞ்சாவூரில் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா வரும் 27ம் திகதி நடைபெறுகிறது.
ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி, புதிய விமான தளத்தை திறந்து வைக்கிறார்.
இப்போது திறக்கப்பட்டாலும் இந்த விமான தளம் முழு அளவில் தயாராக 5 ஆண்டுகளாகும்.
தஞ்சாவூர் விமானப்படை தளம் முழு அளவில் தயாரானவுடன் 16 முதல் 18 சூப்பர் சானிக், சுகோய் விமானங்கள் இங்கு நிறுத்தி வைக்கப்பட உள்ளன.
இது தொடர்பாக டெல்லியில் நேற்று விமானப் படையின் தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: நாட்டின் வடக்கு பகுதியில், எப்போதும் ராணுவத்தின் கண்காணிப்பும், பலமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் தென்பகுதி கடல் சூழ்ந்த பகுதி. மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப, இங்கும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது.
சீன கடற்படையின் நடமாட்டங்களை கண்காணிக்க வேண்டியது அவசியமாகிறது. இந்த பின்னணியில் தான், தஞ்சாவூரில் புதிய விமானப்படை தளம் அமைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் விமானதள கட்டுப்பாட்டு அறையும் தயாராகியுள்ளது. விமானப்படை தளத்தைச் சுற்றிலும், வேலி கட்டப்பட்டு பாதுகாக்கப்பட்ட பகுதியாக மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
0 கருத்துகள்:
Post a Comment