பிரதமர் மன்மோகன்சிங் அலுவலகம் மீது நிலக்கரி ஊழல் வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் கடுமையான விமர்சித்திருப்பது அவருக்கு நெருக்கடியினை அதிகரித்திருப்பதாக கருதப்படுகின்றது.
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு ஊழலில் பிரதமர் மன்மோகன்சிங், நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோருக்கும் தொடர்பிருக்கிறது என்பது எதிர்க்கட்சிகளில் புகார் தெரிவித்துள்ளன.
இதில் குற்றம்சாட்டப்பட்ட திமுகவின் முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவும் கூட பிரதமருக்கு எல்லாம் தெரியும் என்று கை நீட்டிக் கொண்டிருக்கிறார். ஆனால் இந்த விவகாரத்தில் நழுவல் உத்தியைக் கடைபிடித்து ஒருவழியாக தப்பித்துக் கொண்டிருக்கிறார் பிரதமர் மன்மோகன்சிங்.
இருப்பினும் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விவகாரத்தில் அப்படியெல்லாம் நழுவிவிட முடியாது என்ற நெருக்கடியான நிலைதான் இருந்து வந்தது. அதுவும் உச்சநீதிமன்றத்தில் நேற்று பிரதமர் அலுவலக இணை செயலர் சத்ருகன் சின்ஹா, நிலக்கரி அமைச்சக இணை செயலர் அசோக் பல்லா ஆகியோரது நடவடிக்கைகளை விமர்சனம் செய்ததைத் தொடர்ந்து இந்த நெருக்கடி உச்சத்தைத் தொட்டிருக்கிறது.
இவர்கள் இருவரும்தான் சிபிஐ அலுவலகத்துக்கு நேரில் போனவர்கள்... விசாரணை வளையத்தில் இருப்பவர்கள் எப்படி விசாரணை நடத்துகிற சிபிஐயின் விசாரணை அறிக்கையை பார்வையிட முடியும்? இவர்களுக்கு சிபிஐ அலுவலகத்தில் என்ன வேலை? என்று நெத்தியடிக் கேள்வி எழுப்பியதன் மூலம் சிக்கல் வலை பிரதமர் மன்மோகன்சிங்கை இறுக்கவே செய்திருக்கிறது என்றே கருதப்படுகிறது.
அதுவும் இவர்கள் திருத்தியது என்பது நிலக்கரி ஊழல் வழக்கின் விசாரணையின் மிக முக்கியமான பகுதியை என்றும் கோடிட்டுக் காட்டியிருக்கிறது. உச்சநீதிமன்றம். அத்துடன் சிபிஐ சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்பட வேண்டும் என்பதில் உச்சநீதிமன்றம் உறுதி காட்டி வருகிறது. இந்த உறுதியான நிலைப்பாட்டை, உச்சநீதிமன்றத்தின் இந்த அனலை எப்படி எதிர்கொள்வாரோ பிரதமர் மன்மோகன்சிங்? என்பது தான் டெல்லி அரசியல் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
0 கருத்துகள்:
Post a Comment