Search This Blog n

17 May 2013

மதுபான கடைகளை அடித்து நொறுக்கிய பெண்கள்


குடிகார கணவர்களின் தொல்லை தாங்காத பெண்கள் மதுபான கடையை அடித்து நொறுக்கியுள்ளனர்.
ஒடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ளது ஜரகா பஜார் என்ற கிராமம்.
இந்த கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் தங்கள் ஊரிலும், அருகேயுள்ள பகுதிகளிலும் உள்ள மதுபான கடைகளை மூட வேண்டும் என மாவட்ட கலெக்டர், பொலிஸ் கண்காணிப்பாளர் உட்பட அதிகாரிகள் பலரிடமும் மனுக் கொடுத்தனர். அதற்கு எந்த பலனும் இல்லை.
இந்நிலையில், ஜரகா பஜார் கிராமத்தைச் சேர்ந்த சுய உதவிக் குழுவினர் உட்பட, ஏராளமான பெண்கள் தங்கள் ஊரில் உள்ள மதுபான கடையை நேற்று முற்றுகையிட்டனர்.
அங்கு பணியிலிருந்த ஊழியர்களை வெளியேறும்படி கூறிய அவர்கள், கம்பு, கட்டைகளுடன் மதுபான கடைக்குள் நுழைந்து அடித்து நொறுக்கினர். மதுபாட்டில்கள் அனைத்தையும் உடைத்தனர். கடையை துவம்சம் செய்த பின், அனைவரும் வீடு திரும்பினர்.
இதுதொடர்பாக கடையை உடைப்பதில் பங்கேற்ற பெண் ஒருவர் கூறியதாவது: எங்கள் கிராமத்திலும், அருகேயுள்ள பகுதிகளிலும் மதுபான கடைகள் செயல்படுவதால் என் கணவர் தினமும் குடித்து விட்டு வந்து என்னை அடிக்கிறார்.
வருமானத்தில் பெரும்பகுதியை, என் கணவர் மதுவுக்கே செலவிடுகிறார். அதனால் குடும்பம் பட்டினியால் வாட நேரிடுகிறது.
என்னைப் போல கிராமத்திலுள்ள வேறு பல பெண்களும் துயரத்தை அனுபவிப்பதால், நிர்வாகத்தினருக்கு பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காக நாங்களே சட்டத்தை கையில் எடுத்துச் செயல்பட்டதாக தெரிவித்துள்ளார்

0 கருத்துகள்:

Post a Comment