இதுவரையிலும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திருமணங்களை நடத்தி வைத்துள்ளேன் என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
வடசென்னை ராயபுரம் பகுதி திமுக பிரதிநிதி வை.நான்குட்டி மகன் கரிகாலன், பிரவிணா திருமணத்தை திமுக தலைவர் கருணாநிதி நேற்று கோபாலபுரம் இல்லத்தில் நடத்தி வைத்தார்.
அப்போது கருணாநிதி பேசியதாவது, இன்றைக்கு மே 14. இதே நாளில், செப்டம்பரில் 70 ஆண்டுகளுக்கு முன்பு என் திருமணம் நடைபெற்றது.
கோபாலபுரம் இல்லத்தில் மாத்திரம் இதுவரை நடைபெற்ற திருமணங்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்திற்கு மேற்பட்டிருக்கும்.
நான் வெளியூர்களுக்கு சென்று நடத்தி வைத்த திருமணங்கள், சென்னையில் வேறு பகுதிகளில் நான் நடத்தி வைத்த திருமணங்கள் என்று பார்த்தால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டிருக்கும்.
ஒரு காலத்தில் இப்படிப்பட்ட சுயமரியாதைத் திருமணங்களை நடத்திக்கொள்ள யாரும் முன் வர மாட்டார்கள்.
தற்போது அப்படி நடத்திக்கொள்ள முன் வருகிறவர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே உள்ளது.
என்னைப் பொறுத்தவரை 13-9-1944ல் நான் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு, நான் காதலித்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியாமல் சுயமரியாதை திருமணம்தான் நடத்திக் கொள்ள வேண்டுமென்று பிடிவாதமாக இருந்தேன்.
இதனால் நான் காதலித்த பெண் எனக்குக் கிடைக்காமல் போய் விட்டாள். சுயமரியாதைக் கொள்கைக்காக 1944ம் ஆண்டிலேயே காதலித்த பெண்ணை இழந்தவன் நான்.
இதுவரை இந்த திருமணங்களுக்கு வருகை தந்து வாழ்த்தியவர்கள், கலந்து கொண்டவர்கள் என்ற எண்ணிக்கை லட்சக்கணக்கில் இருக்கும்.
திமுக ஆட்சி அண்ணா தலைமையில் உருவான அந்த ஆண்டே, அண்ணா சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாகும் என்ற சட்டத்தைக் கொண்டு வந்தார்.
நீங்கள் ஒரு சபதம் எடுத்துக் கொள்ள வேண்டும். நாம் தமிழர்கள் தமிழ் முறையில் திருமணம் செய்து கொள்வது மாத்திரமல்ல தமிழன், தமிழனாக வாழ தமிழ் மொழியை வளர்க்க எத்தகைய தியாகத்திற்கும் தயாராக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்
0 கருத்துகள்:
Post a Comment