ரூ.1 லட்சத்து 9 ஆயிரம் கோடிக்கு விடப்பட்ட ஸ்பெக்ட்ரம் ஏலத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது.
சுப்ரீம் கோர்ட்டு நிபந்தனை
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, அலைக்கற்றை ஒதுக்கீடு உரிமங்களை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது. இதைத்தொடர்ந்து ஸ்பெக்ட்ரம் மறு ஏலத்துக்காக அனுமதி கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு
தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, ஸ்பெக்ட்ரம் ஏலத்தை நடத்திக்கொள்ளலாம் என்றும், ஆனால் அதன் முடிவை சுப்ரீம் கோர்ட்டுக்கு தெரிவித்த பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கையை தொடர வேண்டும் என்றும் கடந்த மாதம் 26–ந்தேதி நிபந்தனை விதித்தது.
அனுமதி தேவை
இந்த நிலையில் மத்திய அரசு சார்பில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ரூ.1 லட்சத்து 9 ஆயிரம் கோடிக்கு ஏலம் முடிவடைந்தது. இவற்றை ஏலம் எடுத்த 7 நிறுவனங்கள் மார்ச் 31–ந்தேதிக்குள் முன்பணமாக சுமார் ரூ.28 ஆயிரம் கோடியை மத்திய அரசிடம் செலுத்த வேண்டும். இதற்கு சுப்ரீம் கோர்ட்டின் அனுமதி தேவை’ என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் பி.கே.பந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோகத்கி ஆஜராகி வாதாடினார்.
தொடர அனுமதி
அவர் தனது வாதத்தில், ஸ்பெக்ட்ரம் ஏலத்தின் இறுதி முடிவை சுப்ரீம் கோர்ட்டு அனுமதிப்பதுடன், முன்பணமாக ரூ.28 ஆயிரம் கோடியை பெற்றுக்கொள்ள அனுமதிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ஸ்பெக்ட்ரம் ஏலத்தின் முடிவை மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்து, இந்த ஏலம் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகளை தொடரலாம் என்று உத்தரவு பிறப்பித்தனர்.
0 கருத்துகள்:
Post a Comment