கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம் உம்னாபாத் தாலுகாவில் வசிக்கும் ஒரு தொழிலாளியின் வீட்டில் உள்ள பொருட்கள் தானாகவே தீப்பிடித்து எரிந்து வருகிறது. இந்த வினோத சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
பீதர் மாவட்டம் உம்னாபாத் தாலுகா அருகே கடப்பனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கோபால்ராவ். இவரது மனைவி சுனிதா. இந்த தம்பதிகளுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கோபால்ராவ் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். கடந்த மாதம் (பெப்ரவரி) 18-ந் திகதி இரவு கோபால்ராவ் தனது மனைவி, குழந்தைகளுடன் சாப்பிட்டுவிட்டு தூங்கி விட்டார். அன்றைய தினம் அமாவாசை ஆகும்.
இந்த நிலையில், அன்றைய தினம் நள்ளிரவு கோபால்ராவ் வீட்டில் இருந்த துணிகள், அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்களில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. உடனே கோபால்ராவ்,
அவரது மனைவி திடுக்கிட்டு எழுந்து பொருட்களில் பிடித்து எரிந்த தீயை தண்ணீரை ஊற்றி அணைத்தார்கள். அவரது வீட்டில் இருந்த பொருட்களில் எப்படி தீப்பிடித்தது என்று தெரியவில்லை. இதனை கோபால்ராவ், அவரது மனைவியும் கண்டு கொள்ளாமல்விட்டு
விட்டனர். இந்த நிலையில், மறுநாள் இரவும் கோபால்ராவ் வீட்டில் இருந்த பொருட்களில் தீப்பிடித்து எரிந்தது.
இவ்வாறு ஒரு நாள், 2 நாட்கள் அல்லாமல் அமாவாசை தினத்தில் இருந்தே கோபால்ராவ் வீட்டில் உள்ள பொருட்களில் கடந்த 15 நாட்களாக பகல், இரவு நேரங்களில் அடிக்கடி தீப்பற்றி எரிந்தது. இதனால் பயந்து போன கோபால்ராவ், தனது வீட்டில் பொருட்கள் தானாகவே தீப்பிடித்து எரிவது குறித்து கிராம மக்களிடம் தெரிவித்தார்.
இதனை கிராம மக்கள் முதலில் நம்பவில்லை. பின்னர் நடந்த சம்பவங்கள் பற்றியும், அமாவாசையில் இருந்து தான் பொருட்களில் தீப்பிடித்து எரிவதாகவும், இதனால் குழந்தைகளுடன் நிம்மதியாக வீட்டில் இருக்க முடியவில்லை என்றும் சுனிதா கண்ணீர் மல்க கூறினார்.
இதுபற்றி அறிந்ததும் கிராம மக்கள்
அனைவரும் கோபால்ராவ் வீட்டிற்கு ஒன்று திரண்டு வந்தனர். மேலும் கோபால்ராவ் வீட்டில் உள்ள பொருட்களில் தீப்பிடித்து எரிவது எப்படி என்பதை கண்டுபிடிக்க கிராம மக்கள்
முடிவு செய்தனர். இதற்காக கோபால்ராவ் வீட்டிற்கு உள்ளேயும், வெளியேயும் இரவு முழுவதும் தூங்காமல் கிராம மக்கள் காத்து நின்றனர். அன்றைய தினம் இரவும் கோபால்ராவ் வீட்டில் இருந்த உணவு பொருட்கள் துணிகளிலும் தீப்பிடித்து எரிந்தது.
இதற்கிடையில், கோபால்ராவ் வீட்டில் உள்ள பொருட்களில் தான் தீப்பிடித்து எரிகிறது என்று நினைத்த கிராம மக்கள், பக்கத்தில் வசிப்பவர் வீட்டில் இருந்து ஒரு துணியை எடுத்து வந்து, கோபால்ராவ் வீட்டு முன்பு வைத்தனர். இந்த நிலையில், அந்த துணியும் திடீரென்று
தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சியும், பீதியும் அடைந்தனர். இதுபற்றி தாசில்தாரிடமும், உயர் அரசு அதிகாரிகளிடமும் கிராம மக்கள் புகார் கொடுத்தனர். இதையடுத்து, அரசு அதிகாரிகள் கூறிய ஆலோசனையின் படி அதே கிராமத்தில்
உள்ள அரசு பள்ளியில் கோபால்ராவ், அவரது மனைவி, குழந்தைகள் தங்க வைக்கப்பட்டனர். அதன்பிறகும், கோபால்ராவ் வீட்டில் ஒரு சாக்கு பையில் வைத்திருந்த பொருட்களில் தானாகவே தீப்பிடித்து எரிந்தது.
கோபால்ராவ் வீட்டில் உள்ள
பொருட்களில் எதற்காக திடீர், திடீரென்று தீப்பிடித்து எரிகிறது? என்பது தெரியவில்லை. இதனால் கோபால்ராவ் குடும்பத்தினர் மட்டும் அல்லாமல் அந்த கிராமத்தில் வசிப்பவர்களும் பொருட்களில் தானாகவே தீப்பிடித்து எரியும் வினோத சம்பவத்திற்கு விடை தெரியாமல் பெரும் பீதியில் இருந்து வருகிறார்கள்.
இதுகுறித்து கோபால்ராவ் கூறுகையில், “அமாவாசை தினத்தில் இருந்தே என்னுடைய வீட்டில் உள்ள பொருட்களில் தீப்பிடித்து எரிகிறது. இதனால் என்னுடைய குடும்பத்துடன் நிம்மதியாக வாழ முடியவில்லை. எப்போது வீட்டில் உள்ள பொருட்களில் தீப்பிடித்து எரிகிறது? என்பது கூட தெரியவில்லை. கடந்த 15 நாட்களாக நானும், எனது குடும்பத்தினரும், கிராம மக்களும் என்ன செய்வது என்று தெரியாமல் அதிர்ச்சியில் இருக்கிறோம்,“ என்றார்.
இந்த சம்பவம் பற்றி அரசு அதிகாரி ஒருவர் கூறும் போது, ‘தொழிலாளி கோபால்ராவ் வீட்டில் உள்ள பொருட்களில் தீப்பிடித்து எரிவது குறித்து உரிய விசாரணை நடத்தி, உண்மையான காரணம் பற்றி தெரிவிக்கப்படும். இதற்காக கிராம மக்கள் பீதி அடைய தேவையில்லை,‘ என்றார்.
0 கருத்துகள்:
Post a Comment