Search This Blog n

21 March 2015

இளைஞர் வாயில் சிறுநீர் கழித்து கொடுமை சிபிசிஐடி விசாரணைக்கு

கிருஷ்ணகிரி மாவட்டம் கருவானூர் கிராமத்தில் ஊர் திருவிழாவின்போது கோயிலுக்குச் சென்றதற்காக அரவிந்தன் என்ற குறவர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை ஆதிக்கச் சாதிக் கும்பல் ஒன்று அடித்துத் துன்புறுத்தியதோடு, அடிதாங்க முடியாமல் குடிக்கத் தண்ணீர் கேட்ட இளைஞரின் வாயில் சிறுநீர் கழித்திருக்கிறார்கள். இந்த வழக்கில் உள்ளூர் காவல்துறை ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதால் வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.
இந்த சம்பவம் நடந்து மூன்று வாரங்கள் ஆனபோதிலும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழான இதை விசாரிக்க வேண்டிய ஊத்தங்கரை டிஎஸ்பி, பாதிக்கப்பட்ட இளைஞரைச் சந்திக்கக்கூட இல்லை. அதுமட்டுமின்றி, ‘சிறுநீர் கழித்ததாகச் சொல்லப்படுவது உண்மை இல்லை’ என அவர் பத்திரிகைகளுக்குப் பேட்டி கொடுத்திருக்கிறார். இதிலிருந்தே அவர் இந்த வழக்கில் குற்றவாளிகளைப் பாதுகாக்க முயற்சிக்கிறார் என்பது வெளிப்படையாகத் தெரியவருகிறது.

தற்போது ஊடகங்களின்மூலம் இந்தக் கொடூர சம்பவம் வெளிஉலகுக்குத் தெரியவந்த நிலையில் பாதிக்கப்பட்ட இளைஞர் மீதே பொய் வழக்கு ஒன்றை போலீஸ் பதிவு செய்திருக்கிறது. இந்தச் சூழலில் இந்த வழக்கை உள்ளூர் காவல்துறை விசாரித்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காது. எனவே சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிடவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கேட்டுக்கொள்கிறது.

அண்மைக்காலமாக தமிழகம் முழுவதும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. தமிழகக் காவல்துறை சாதிவெறியர்கள்மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்காததன் விளைவே இது. வன்கொடுமைகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டுமென பலமுறை விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் வலியுறுத்தியிருக்கிறோம். ஆனாலும் தமிழக அரசு இதில் மெத்தனமாகவே இருக்கிறது.
தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்திருக்கும் இந்த மனிதத் தன்மையற்ற சம்பவத்துக்காக தமிழ்நாட்டில் உள்ள ஓவ்வொருவரும் வெட்கித் தலைகுனியவேண்டும். இதனால் இந்திய அளவில் தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய அவமானம் ஏற்பட்டிருக்கிறது என்பதைத் தமிழக அரசு உணரவேண்டும். இனியும் குற்றவாளிகளைக் காப்பாற்ற முற்படாமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைத்திட இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>




0 கருத்துகள்:

Post a Comment