மக்கள் அச்சம் விண்கற்கள் எரிந்து சிதறியதாக விஞ்ஞானி விளக்கம்
கேரளாவில் நள்ளிரவில் நடுவானில் நெருப்புக்கோளம் தோன்றியது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர். ஆனால் அது விண்கற்கள் எரிந்து சிதறியதாக இருக்கலாம் என்று விஞ்ஞானி விளக்கம் அளித்துள்ளார்.
வானில் தோன்றிய நெருப்புக்கோளம்
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கொச்சியில் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு மேல் வானில் திடீரென
ஒரு நெருப்புக்கோளம் தோன்றியது.
பெரிய தீப்பந்தம் போல இருந்த அந்த நெருப்புக்கோளம் தென்கிழக்கில் இருந்து வடமேற்கு நோக்கி அதிவேகமாக நகர்ந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
இந்த காட்சி எர்ணாகுளம், பத்தனம்திட்டா, கண்ணனூர், கோழிக்கோடு, கோட்டயம், ஆலப்புழை ஆகிய 6 மாவட்டங்களில் தெரிந்தது. அதில் எர்ணாகுளம் மாவட்டம் கோலசேரி, பரவூர், வலம்பூர், கரிமல்லூர் ஆகிய இடங்களில் அந்த காட்சி மிகவும்
தெளிவாக தெரிந்தது.
மேலும், அந்த நேரத்தில் பூமி குலுங்கியதாகவும், நில அதிர்வு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் ஏதோ விபரீதம் நடக்கப்போவதாக அவர்கள் கருதினர்.
விஞ்ஞானி கருத்து
இதையடுத்து கேரள மாநில பேரிடர் மேலாண்மை குழுவினர் ஆய்வு செய்ததில் நெருப்புக்கோளம் தோன்றியது எர்ணாகுளம் மாவட்டம் கரிமல்லூர் பகுதி என்பது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து கேரள மாநில பேரிடர் மேலாண்மை குழுவினர் அங்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
இது குறித்து மாநில பேரிடர் மேலாண்மை விஞ்ஞானி சேகர்குரியகோஸ் கூறுகையில், வானில் நெருப்புக்கோளம் நகர்ந்ததை திருச்சூர், எர்ணாகுளம், பாலக்காடு மலப்புரம், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் உணர்ந்துள்ளனர். ஆனால் அது நிகழ்ந்த பகுதி எர்ணாகுளம் மாவட்டம் கரிமல்லூர் என்பதை அறிந்து எங்களது குழுவினர் அங்கு விரைந்துள்ளனர். அவர்களின் ஆய்வு அறிக்கை கிடைத்த பிறகு உண்மையான காரணம் தெரிய வரும் என்றார்.
விண்கல்லாக இருக்கும்
இது குறித்து கேரள வானியல் விஞ்ஞானி ராஜகோபாலன் கம்மத் கூறியதாவது:–
இது ஒரு தற்செயல் நிகழ்வு தான். அகண்ட பிரபஞ்சத்தில் அலைந்து திரியும் விண்கற்கள் பூமியின் ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டு, வளிமண்டலத்திற்குள் நுழையும்போது ஏற்படும் வெப்பத்தால் எரிந்து சாம்பலாகி விடும். அப்போது அவை பெரிய நெருப்புப்பந்து போல வேகமாக பாய்ந்து செல்லும். அவை அளவில் சிறியதாக இருந்தால் அதிகமாக நம் பார்வைக்கு தெரிவதில்லை. அதே நேரத்தில் அவை அளவில் பெரியதாக இருக்கும் போது பெரிய நெருப்புப்பந்து வானில் நகர்ந்து செல்வது போல் தோன்றும். கேரளாவில் அன்றைய தினம் தெரிந்ததும் ஒரு விண்கற்கள் எரிந்து சாம்பலான காட்சியாக இருக்கலாம்.
இதுபோல் வானில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பொதுமக்கள் அச்சம் அடைய தேவையில்லை.
0 கருத்துகள்:
Post a Comment