மீனவர்கள் விவகாரம் தொடர்பாக விவாதிக்க இலங்கையை சேர்ந்த குழு ஒன்று இந்த வாரம் இந்தியா வர உள்ள நிலையில், இந்திய மீனவர்கள் 54 பேரை இலங்கை கப்பற்படை கைது செய்துள்ளது. இது குறித்து இலங்கை கப்பற்படையின் செய்தி தொடர்பாளர் இண்டிகா சில்வா கூறும்போது, காங்கேசன்துறை பகுதியில் 21 மீனவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர் மற்றும் 5 படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
தலைமன்னார் பகுதியில் 5 படகுகளில் இருந்த 33 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அடுத்த நடவடிக்கை எடுப்பது தொடர்பாக, மீன்வள ஆய்வு அலுவலகத்திற்கு அவர்கள் கொண்டு செல்லப்பட்டு உள்ளனர் என அவர் கூறியுள்ளார். பிரதமர் மோடியின் சமீபத்திய இலங்கை பயணத்தின்போது, நல்லெண்ண அடிப்படையில் 86 இந்திய மீனவர்களை இலங்கை அரசு விடுவித்திருந்தது.
இந்நிலையில், சர்வதேச எல்லை மற்றும் ஒருவரது எல்லைக்குட்பட்ட கடல் நீரில் மற்றொருவர் அத்துமீறி செல்லுதல் உள்ளிட்ட மீனவர்கள் விவகாரம் குறித்து இந்த வாரம் விவாதிப்பதற்காக இலங்கை குழு ஒன்று இந்தியா வர உள்ளது. இரு நாடுகளின் மீனவ அமைப்புகளுக்கு இடையே சென்னையில் வருகிற மார்ச் 24 மற்றும் மார்ச் 25ந்தேதி
பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த கைது நடவடிக்கை அமைந்துள்ளது. சமீபத்தில், எல்லை தாண்டி ஊடுருபவர்களை சுட்டு தள்ளும் அதிகாரம் இலங்கையிடம் உள்ளது என அந்நாட்டு பிரதமர் ரனில் விக்ரமசிங்கே கூறியிருந்தது இந்திய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
0 கருத்துகள்:
Post a Comment