உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் கடந்த 11–ந் தேதி நடந்த மோதலில் ரோஷன் அகமது என்ற வக்கீலை, சைலேந்திர குமார் சிங் என்ற சப்–இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொன்றார். இந்த சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் வக்கீல்கள் போராட்டம் நடத்தி வருவதுடன், கோர்ட்டு புறக்கணிப்பையும் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் சைலேந்திர குமார் சிங் நேற்று முன்தினம் மாலையில் பிரயாக் ரெயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டார். நைனி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ள அவர், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் குமார் யாதவிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
அப்போது அவர், ‘ஒரு சிறிய பிரச்சினைக்காக வாக்குவாதத்தில் ஈடுபட்ட வக்கீல்கள், என் மீது தாக்குதல் நடத்தினர். கடுமையாக தாக்கியதாலும், எனது கைத்துப்பாக்கியை பறிக்க முயன்றதாலும் என்னை தற்காத்துக்கொள்ள நான் துப்பாக்கியால் சுட்டேன். அப்போதும் வானத்தை நோக்கிதான் சுட்டேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக வக்கீல் மீது குண்டு பாய்ந்தது’ என்று கூறியுள்ளார்.
சம்பவத்துக்கு பின்னும் வக்கீல்களை கண்டு பயந்துதான் ஒளிந்திருந்ததாகவும் சப்–இன்ஸ்பெக்டர் சைலேந்திர குமார் சிங் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
0 கருத்துகள்:
Post a Comment