ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில் பெண் ஒருவரை கொலை செய்த கூலித்தொழிலாளி செய்வினை வைத்ததால் கொன்றதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
கோபிசெட்டிபாளையம் புகழேந்தி வீதியை சேர்ந்த பழனியப்பன் என்பவரின் மனைவி பழனியம்மாள்(60) கூலி வேலை பார்த்து வந்துள்ளார்.
அதே பகுதியை சேர்ந்த இவரது உறவினர் காளியப்பன்(74) என்பவருக்கும் பழனியப்பன் குடும்பத்தினருக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது.
இந்நிலையில் நேற்று காலை பழனியம்மாள் கூலி வேலைக்கு சென்ற போது, காளியப்பன் அவரை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்துள்ளார்.
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக கோபிசெட்டிபாளையம் பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொலிஸ் விசாரனையில், இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முதியவர் காளியப்பன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதில், பழனியம்மாளின் மகள் மகேஸ்வரியை தயிர் பாளையத்தை சேர்ந்த தங்கவேல் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தனர்.
தங்கவேலின் தம்பிக்கு என் மகள் காந்தாமணியை திருமணம் செய்து கொடுத்திருந்தேன்.
இந்நிலையில் எனக்கும் பழனியம்மாளுக்கும் பிரச்சனை ஏற்பட்டு முன்விரோதம் ஏற்பட்டது.
என் மகள் காந்தாமணிக்கு குழந்தை இல்லாத நிலையில், என் மகளுக்கு குழந்தை பிறக்கக்கூடாது என பழனியம்மாள் செய்வினை வைத்தார்.
இதனை அறிந்த நான் கடும் ஆத்திரம் கொண்டதோடு, என் மகளை வாழ விடாமல் இடைஞ்சல் செய்து வந்த பழனியம்மாளை கொலை செய்ய முடிவு செய்தேன்.
மேலும், என் திட்டப்படி அவர் கூலி வேலைக்கு சென்ற போது பின்னால் சென்று விரட்டி அரிவாளால் வெட்டி கொலை செய்தேன் என்று தெரிவித்துள்ளார்.
தற்போது மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட காளியப்பன், நீதிமன்ற உத்தரவுபடி மாவட்ட சிறையில் 15 நாட்கள் காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.
0 கருத்துகள்:
Post a Comment